அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இடையே இன்று சிங்கப்பூரில் நடந்து முடிந்த வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாடு குறித்து பல உலக நாடுகள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளன.
வட கொரியா மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள ராஜீய சுமுக நிலைக்கு ஆதரவு அளிக்கும் விதமாக வட கொரியாவுக்கு எதிரான தடைகள் விலக்கிக் கொள்ளப்படலாம் என்று சீனா தெரிவித்துள்ளது.
வட கொரியாவின் எல்லையில், சீனா ஏற்கெனவே தடைகளை தளர்த்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பனிப்போர் மோதலில் கடைசியாக எஞ்சியிருப்பவை சிங்கப்பூர் உச்சி மாநாட்டோடு முடிவுக்கு வரலாம் என்று தென் கொரிய அதிபர் மூன் ஜியே-இன் கருத்து தெரிவித்துள்ளார்.
வட கொரியாவின் அணு ஆயுதங்கள் பற்றி திருப்பு முனையாக அமையும் பேச்சுவார்த்தையில், இது முதல் படி என்று பிரதமர் ஷின்சோ அபே கூறியிருப்பதன் மூலம், ஜப்பான் மிகவும் எச்சரிக்கையோடு கருத்து தெரிவித்துள்ளது. -BBC_Tamil