‘தென் கொரியா உடனான கூட்டு ராணுவ பயிற்சி இனி என்ன ஆகும்?, கிம்மிற்கு பாராட்டு, வட கொரியா மீதான தடை, வட கொரிய கடற்கரையின் அழகு, மாணவர் ஓட்டோ வார்ம்பியர்’ என கிம் உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் பல விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொண்டார்.
”கிம் உடனான எனது சந்திப்பு நேர்மையான, நேரடியாக மற்றும் ஆக்கப்பூர்வமாக இருந்தது. கடுமையான செயலின் தொடக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. நாம், போரின் பயங்கரத்தை மாற்றி அமைதியை ஏற்படுத்தலாம். வட கொரியா தனது அணு ஆயுதங்களைக் கைவிட்டால், அதனால் அந்நாடு எதையெல்லாம் பெறலாம் என்பதற்கு எல்லையே இல்லை. உலக நாடுகள் உண்மையில் வட கொரியாவுடன் இணைந்து செயல்பட விரும்புகின்றன.” என டிரம்ப் கூறினார்.
- டிரம்ப் – கிம் உச்சிமாநாடு: 4 முக்கிய பிரகடனங்கள்
- வெற்றிகரமாக நடந்த டிரம்ப்-கிம் சந்திப்பு: பின்னணியில் தமிழர்
“கிம் புத்திசாலித்தனம் மிக்கவர். இளம் வயதிலேயே ஆட்சியில் அமர்ந்து, நாட்டை ஆள்கிறார்,” என தனது பாராட்டைத் தெரிவித்துக்கொண்ட டிரம்ப், “தனது மக்களுக்குச் செழிப்பை ஏற்படுத்த, புதிய சகாப்தத்தை தொடங்கி வைத்தவர்,” என கிம் நினைவுகூரப்படுவார் எனவும் தெரிவித்தார்.
”வட கொரியாவிற்கு கொடுக்கப்படும் உத்தரவாதங்களின் ஒரு பகுதியாக தங்களின் ராணுவ திறன்களை குறைக்கப்போவதில்லை. ஆனால், தென் கொரியாவுடனான கூட்டு ராணுவ பயிற்சிகளை அமெரிக்கா நிறுத்திக்கொள்ளும்” என்று அவர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டு ராணுவப் பயிற்சியினால் அதிகளவில் பணம் செலவாகிறது எனவும் டிரம்ப் குறிப்பிட்டார்.
வடகொரியாவின் அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், “நிச்சயமாகக் கண்காணிக்கப்படும்,” என்றும் “அந்தக் கண்காணிப்புக் குழுவில் அமெரிக்கர்களும் சர்வதேச பார்வையாளர்களும் இடம்பெறுவார்கள்,” என்றும் தெரிவித்தார்.
மனித உரிமைகள் குறித்து விவாதிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, ஓப்பீட்டளவில் சுருக்கமாக விவாதிக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்தார்.
மேலும், வட கொரியாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள, மீதமுள்ள அமெரிக்க ராணுவ வீரர்களை திரும்ப அனுப்ப என்று கிம் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் டிரம்ப் கூறினார்.
“அணு ஆயுத பயன்பாடு முடியும்போதுதான் வடகொரியா மீதான பொருளாதார தடைகள் விலக்கப்படும். நான் தடைகளை நீக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். அணு ஆயுத நீக்கம் குறித்து வட கொரியா உத்தரவாதம் அளிக்கும்போது தடை நீக்கம் பற்றி முடிவு செய்யப்படும். தற்போதைக்கு இந்தத் தடைகள் தொடரும்” என்று குறிப்பிட்டார்.
”அணு ஆயுத ஏவுகணை சோதனைக்கு பயன்படுத்தப்பட்ட முக்கிய தளங்களை ஏற்கனவே அழித்துவிட்டதாக கிம் என்னிடம் கூறினார்” என்றார் டிரம்ப்.
”நான் அச்சுறுத்தலை விரும்பவில்லை”
”வட கொரியாவுக்கு தான் அச்சுறுத்தலாக இருக்க விரும்பவில்லை. வட கொரியா உடன் ஏதேனும் மோதல் ஏற்பட்டால், அதனால் மில்லியன் கணக்கான தென் கொரிய மக்கள் பாதிக்கப்படுவார்கள்,” என்றார் அவர்.
- மூத்த சகோதரர்களை தாண்டி அரியணையில் கிம் ஜோங்-உன் அமர்ந்தது எப்படி?
- கிம் ஜோங் – உன்னை தேடிய தென் கொரியா மக்கள்
”நேற்றைய மோதல், நாளைய போராக மாற வேண்டியதில்லை,” என்கிறார் டிரம்ப்.
வட கொரியாவின் ராணுவ ஒத்திகை காணொளிகளின் பின்னணியில், சிறந்த கடற்கரைகளை தான் பார்த்ததாக டிரம்ப் கூறினார்.
”அங்கு உலகின் சிறந்த ஆடம்பர விடுதிகளை அமைக்கலாம் என விவரித்தேன். ரியல் எஸ்டேட் பார்வையில் இதனைக் கூறினேன்” என டிரம்ப் தெரிவித்தார்.
வட கொரியாவில் கைது செய்யப்பட்டு, கோமா நிலையில் சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க மாணவரான ஓட்டோ வார்ம்பியர் பற்றி பேசிய டிரம்ப், ”வார்ம்பியர் இல்லாமல் இந்த சந்திப்பு நடந்திருக்காது,” என்றார்.
”இங்கு நடந்ததைப் பார்த்து தென் கொரிய அதிபர் மூன் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார். நானும், கிம்மும் கையேழுத்திட்ட ஆவணத்தை மூனுக்கு அனுப்பியுள்ளேன். இந்தச் நடைமுறைகளில் சீனாவும், தென் கொரியாவும் இடம்பெற வேண்டும் என விரும்புகிறேன்.”
”அனைவருக்கும் வாழ்த்துக்கள். என்னைப் பொறுத்தவரை, உலக வரலாற்றில் இது ஒரு முக்கிய நிகழ்வு,” என்று இந்த சந்திப்பு குறித்து டிரம்ப் கூறினார். -BBC_Tamil