நாடாளுமன்றத்தில் இன்று இரண்டாவது வாசிப்புக்குத் தாக்கல் செய்யப்படும் 2011ம் ஆண்டுக்கான அமைதியாகக் கூடுதல் மசோதா இயற்றுவதை நிறுத்துமாறு சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையம் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.
ஆகவே 2011ம் ஆண்டுக்கான அமைதியாகக் கூடுதல் மசோதாவை சட்டமாக இயற்றுவதற்கு முன்னர் அது குறித்து பல்வேறு தரப்புக்கள் தெரிவித்துள்ள பரிந்துரைகளை பரிசீலிக்க வேண்டும் எனவும் ஆணையம் அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறது. சுதந்திரமாக ஒன்று கூடுவது மீது பொது விவாதத்திற்கு ஏற்பாடு செய்யுமாறும் அது வலியுறுத்துகிறது. மனித உரிமைக் கோட்பாடுகளுக்கு ஏற்ப அதன் விதிமுறைகள் இருப்பதும் அவசியமாகும்,” என சுஹாக்காம் தலைவர் ஹாஸ்மி அகாம் இன்று வெளியிட்ட அறிக்கை கூறியது.
மனித உரிமை விவகாரங்கள் மீது அரசுக்கு ஆலோசனை கூறும் பொருட்டு அமைக்கப்பட்ட சுஹாக்காம் அந்த மசோதாவை வரவேற்கிறது என்றாலும் ஒன்று கூடுவதற்கான சுதந்திரம், மற்றும் அது தொடர்பான விஷயங்கள் மீது சட்டத்துறைத் தலைவருடன் கடந்த மாதம் நடத்தப்பட்ட சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட தனது கருத்துக்கள் மசோதாவில் இல்லை என்று அந்த அறிக்கை கூறியது.
அமைதியான பொதுக் கூட்டங்கள் வழி தங்களது கருத்துக்களை வெளியிடுவதற்கு மக்களுக்குள்ள உரிமை பாதுகாக்கப்படுவதற்கு அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ள சில விதிமுறைகளில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் எனவும் சுஹாக்காம் வலியுறுத்தியது.
“அந்த மசோதாவில் காணப்படும் சில விதிமுறைகள் அளவுக்கு அதிகமான கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. போலீசாருக்கு அளவுக்கு அதிகமான அதிகாரங்களை வழங்குகின்றன. அதனால் அமைதியாக கூட்டங்களை நடத்துவதற்கு மக்களுக்கு உள்ள உரிமை மீறப்படுகிறது.”
மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ள யோசனைகள்:
1. ஊர்வலத்தையும் ‘சாலை ஆட்சேபத்தையும்’ உள்ளடக்கிய “கூட்டம்” என்ற சொல்லுக்குத் தெளிவான விளக்கம் தேவை.
2.ஆயுதங்கள் ஏதுமில்லாமல் குடி மக்கள் அல்லாதவரும் அமைதியாக கூடும் வகையில் உரிமை விரிவு செய்யப்பட வேண்டும். ஏனெனில் அவர்களுக்கும் தங்கள் கருத்துக்களை சொல்வதற்கு உரிமை உண்டு.
3. தடை செய்யப்பட்ட ஒர் இடத்திலிருந்து 50 மீட்டர் சுற்றளவுக்குள் கூட்டம் நிகழ்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். ஏனெனில் பெரும்பாலான மாநகரங்களிலும் நகரங்களிலும் அது சாத்தியமல்ல.
4.போலீஸ் விதிக்கும் நிபந்தனைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் எதிராக அமைச்சருக்கு முறையீடு செய்து கொள்வதற்கு பதில் நீதிமன்றங்களுக்கு செல்ல அனுமதிப்பது.
5. குழந்தைகள் உரிமைகள் ஒப்பந்தத்தில் நாம் கையெழுத்திட்டுள்ளதால் குழந்தைகள் பங்கு கொள்வது பற்றிய விதிகளை மறு ஆய்வு செய்ய வேண்டும்.
6. கூட்டம் மீது பொதுக் கூட்ட ஏற்பாட்டாளர்களும் போலீசும் ஒன்று கூடி விவாதித்து இணக்கம் காண்பதற்கான கூட்டுறவு மாதிரியை அமல் செய்ய 13வது விதிமுறை மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்.
7. அமலாக்க அதிகாரிகள் பலத்தைப் பயன்படுத்துவது, சுடும் ஆயுதங்களைப் பயன்படுத்துவது மீது ஐநா அடிப்படை கோட்பாடுகளை அந்த மசோதாவின் ஐந்தாவது பகுதியில் இணைக்க வேண்டும்.
8. 24வது பிரிவின் கீழ் பொதுக் கூட்டங்களில் செய்திகளைச் சேகரிப்பதற்கு ஊடகங்களுக்கு முழுமையான வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
9. 30 நாட்கள் முன்கூட்டியே அறிவிப்பு கொடுக்க வேண்டும் என்ற விதியை மறு ஆய்வு செய்ய வேண்டும். அல்லது 30 நாட்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத விஷயங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
10. பொதுக் கூட்டங்களைக் கண்காணிப்பதற்கு சுஹாக்காம், வழக்குரைஞர் மன்றம், மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அமைப்புக்கள் கண்காணிக்க அனுமதி வழங்குவது.
சுஹாக்காம் அந்த மசோதாவின் நோக்கங்களை ஆதரிக்கிறது. ஆனால் அந்த மசோதாவின் அமலாக்கம் முக்கியமானது. பொதுக் கூட்டங்களுக்கான ஏற்பாடுகளுக்கும் அந்தக் கூட்டங்களினால் மறைமுகமாக பாதிக்கப்படக் கூடிய மக்களுடைய சுதந்திரம், உரிமைகள் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையில் சமநிலை காணப்பட வேண்டும் என அது கூறியது.
1967ம் ஆண்டுக்கான போலீஸ் சட்டத்தின் 27, 27A, 27B, 27C ஆகிய பிரிவுகள் ரத்துச் செய்யப்படுவதையும் வரவேற்பதாக ஆணையம் குறிப்பிட்டது. காரணம் அது மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கிறது.
“என்றாலும் அதற்குப் பதில் அறிமுகம் செய்யப்படும் சட்டம், மக்கள் ஒன்று கூடுவதற்கு வசதிகளைச் செய்து தராமல் அளவுக்கு அதிகமான கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் விதிக்கிறது.”
“அமைதியும் நிலைத்தன்மையும் முக்கியமானது, பொது ஒழுங்கு எல்லா நேரத்திலும் நிலை நாட்டப்பட வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ளும் வேளையில் பொது மக்கள் அமைதியாக ஒன்று கூடி, தாங்கள் கவலைப்படுகின்ற பிரச்னைகள் மீது கருத்துக்களைத் தெரிவிக்க வகை செய்யப்பட வேண்டும் என ஆணையம் கருதுகிறது.”