ரம்ஜானை முன்னிட்டு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ராணுவத்தினர் மற்றும் தலிபான் அமைப்பினர் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் அரசு படைக்கும், தலிபான் அமைப்புக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது.
ஆனால், ரம்ஜானை முன்னிட்டு, அதற்கு முந்திய 5 நாட்கள் தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பு ஒன்றை ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி அறிவித்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்டு தலிபான்களும் நேற்று முதல் 3 நாட்கள் போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், ரம்ஜான் கொண்டாடப்படும் இன்று ஆயுதங்கள் ஏதும் இன்றி ஆப்கன் தலைநகர் காபூலுக்கு வந்த தலிபான் அமைப்பினர் அங்கிருந்த அரசு படையினரை கட்டித்தழுவி ரம்ஜான் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், ராணுவத்தினருடன் சேர்ந்து தலிபான்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
‘இதை எங்களால் நம்பவே முடியவில்லை, ராணுவ வீரர்கள் மற்றும் தலிபான்கள் அருகருகே நிற்பது வித்தியாசமான உணர்வை தருகிறது. இந்த ரம்ஜான் மிக அமைதியாக கொண்டாடப்படுகிறது. இன்று நான் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறேன். இதேபோல் அமைதியான ரம்ஜான் ஆப்கானிஸ்தானில் முன்னெப்போதும் கொண்டாடப்படவில்லை’ என கல்லூரி மாணவர் ஒருவர் தெரிவித்தார்.
-athirvu.in