வர்த்தகப் போர்: அமெரிக்காவின் வரிக்கு போட்டியாக வரி விதிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்

ஸ்டீல் மற்றும் அலுமினிய இறக்குமதிக்கு அமெரிக்கா விதித்த கடும் வரிகளுக்குப் பதிலடியாக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு வெள்ளிக்கிழமை புதிய வரிகளை அறிவிக்கவுள்ளது ஐரோப்பிய ஒன்றியம்.

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நீல ஜீன்ஸ், மோட்டார் சைக்கிள்கள், போர்போன் விஸ்கி போன்றவற்றைக் குறிவைத்து ஐரோப்பிய யூனியன் வரிவிதிப்பு இருக்கும் என்று ஐரோப்பிய யூனியன் வணிக ஆணையர் சிசிலியா மால்ம்ஸ்டோர்ம் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் இந்த நிலையில் இருப்பதை விரும்பவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

“தன்னிச்சையான மற்றும் நியாயப்படுத்த முடியாத அமெரிக்காவின் இந்த வரிகளால் தங்களுக்கு வேறு வழியில்லை,” என்று மால்ம்ஸ்டோர்ம் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம், கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் பொருட்கள் மீது 25% மற்றும் அலுமினியப் பொருட்கள் மீது 10% என்று வரிவிதித்து டிரம்ப் முன்னர் அறிவித்தபோதே, பதில் வரி விதிப்பதற்கான பொருட்களின் பட்டியலை ஐரோப்பிய ஒன்றியம் தயார் செய்தது.

கிரேன்பெரி பழங்கள், ஆரஞ்சு பழச்சாறு, மக்காச் சோளம், பீனட் பட்டர் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மற்றும் பிற அந்தப் பட்டியலில் இருந்தன. அமெரிக்கா மற்றும் அதன் வர்த்தகக் கூட்டாளிகளிடையே நிலவி வரும் வர்த்தகப் போருக்கு நடுவே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

EU

ஏற்கனவே 50 பில்லியன் டாலர் மதிப்புள்ள சீன சரக்குகள் மீது இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 200 பில்லியன் டாலர் மதிப்புள்ள சரக்குகள் மீதும் கூடுதலாக வரி விதிக்கப்படும் என்று செவ்வாயன்று டிரம்ப் அச்சுறுத்தியிருந்தார்.

இந்த வர்த்தகப் போர் எவ்வாறு தொடங்கியது?

பாதுகாப்பு காரணங்களுக்காக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் ஸ்டீல் மற்றும் அலுமினியப் பொருட்கள் மீது வரி விதிக்கப்படும் என்று மார்ச் மாதம் டிரம்ப் அறிவித்தார்.

ஸ்டீல் மற்றும் அலுமினியம் ஆகியன உலக அளவில், முக்கியமாக சீனாவால், அதிகமாக விநியோகிக்கப்படுவதால், அமெரிக்க ஸ்டீல் மற்றும் அலுமினிய உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதாக அவர் கூறினார்.

அந்த அறிவிப்பு வெளியானது முதல் தென்கொரியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் உலோகங்களின் அளவில் கட்டுப்பாடுகள் விதிக்க ஒப்புக்கொண்டன.

US steel

எனினும், ஜூலை 1 முதல் 16.6 பில்லியன் கனட டாலர் மதிப்பிலான அமெரிக்க சரக்குகள் மீது வரி விதிக்கப்படும் என்று கனடா அறிவித்தது.

இரு வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்து வரும் ஸ்டீல், பன்றி இறைச்சி உள்ளிட்ட பொருட்கள் மீது மெக்சிகோ வரி விதித்தது.

ஐரோப்பிய ஒன்றியம் சொல்வது என்ன?

“உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு உட்பட்டு, அமெரிக்கா விதித்துள்ள வரிகளுக்கு சரி விகித அளவிலான வரியையே ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ளது,” என்று மால்ம்ஸ்டோர்ம் கூறியுள்ளார்.

அமெரிக்கா விதித்துள்ள வரிகள் நீக்கப்பட்டால், 2.8 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க சரக்குகள் மீது விதிக்கப்பட்ட வரியும் ரத்து செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வரி விதிப்புக்கு உள்ளாகும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஸ்டீல் மற்றும் அலுமினிய பொருட்களின் மதிப்பு 6.4 பில்லியன் டாலராக உள்ளது.

என்ன தாக்கம் உண்டாகும்?

அரசியல் தாக்கங்களை உண்டாக்கும் வகையிலேயே ஐரோப்பிய ஒன்றியம் வரி விதிப்புக்கான சரக்குகளை தேர்வு செய்துள்ளது.

மக்கச்சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் விஸ்கி மதுபானத்துக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் தயாரிக்கப்படுகிறது. இது செனட் சபையின் பெரும்பான்மை தலைவர் மிட்ச் மெக்கனலின் சொந்த மாகாணமாகும்.

டிரம்ப்

ஆரஞ்சு பழச்சாறு, தேர்தல் முடிவுகளில் தாக்கம் செலுத்தும் புளோரிடா மாகாணத்தில் அதிகமாக தயாரிக்கப்படுகிறது.

அதிக வரிகள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையை உயர்த்தி அதன் சுமையை அமெரிக்க நுகர்வோர் தாங்க வேண்டியிருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்திருந்தனர். எனினும் அதன் விளைவு குறைவாகவே இருக்கும் என்று அமெரிக்கா வர்த்தகச் செயலர் வில்பர் ரோஸ் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்க நிறுவனங்களுக்கு வர்த்தக ரீதியான தடைகளை உண்டாக்கினால் மேலும் வரி விதிக்கப்படும் என்று மார்ச் மாதம் டிரம்ப் கூறியிருந்தார்.

இந்த வர்த்தகப் போரால் இரு பக்கமும் தோல்வி அடைபவர்கள் உண்டாகி, மோசமான விளைவு ஏற்படும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர் கிறிஸ்டைன் லகார்டு கூறியுள்ளார். -BBC_Tamil