பூமிக்கு வெளியேவும் ஆயுதங்களை கொண்டு வராதீர்கள் – டிரம்ப்பின் விண்வெளி படைக்கு ரஷியா எதிர்ப்பு..

அமெரிக்க ராணுவத்தில் விண்வெளிப் படைப்பிரிவு உருவாக்க வேண்டும் என்ற டிரப்பின் அறிவிப்புக்கு ரஷியா கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

பூமியை போலவே விண்வெளியிலும் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை செலுத்த முழுமூச்சாக முயன்று வருகிறது. ஆனாலும், பூமியை போலவே விண்வெளியிலும் ரஷியா அமெரிக்காவுக்கு சரிக்கு சமமான போட்டியாளராக இருந்து வருகிறது.

விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச ஆய்வு மையத்தில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றினாலும், தனிப்பட்ட ஆதிக்கத்தை அங்கு செலுத்த இரு நாடுகளுமே முயற்சித்து வருகின்றன.

சமீபத்தில், அமெரிக்க ராணுவத்தில் விண்வெளி படை என்ற புதிய படைப்பிரிவை உருவாக்க வேண்டும் என அதிபர் டிரம்ப் கேட்டுக்கொண்டார். அதற்கான, பணிகளை மேற்கொள்ள அந்நாட்டு பாதுகாப்பு துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், விண்வெளியில் ரஷியா, சீனாவை பின்னுக்கு தள்ளி அமெரிக்காவே முதலிடத்தில் இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், டிரம்ப்பின் விண்வெளிப்படை அறிவிப்புக்கு ரஷியா தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக பேசிய அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மரியா ஷஹரோவா, “டிரம்ப்பின் விண்வெளிப்படை அறிவிப்பை கேட்டுக்கொண்டோம். விண்வெளியிலும் ஆதிக்கம் செலுத்துவது அவர்களின் நோக்கம். ஆனால், இது ஆபத்தான ஒன்று.” என கூறினார்.

மேலும், “விண்வெளியில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் அங்கு ஆயுதங்களைக் கொண்டு வருவதற்கான திட்டங்களை வளர்ப்பது சரியானதாக இருக்காது. அமைதியின் நோக்கத்தை சிதைப்பதாக இது அமையும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

-athirvu.in