கொரியப் போர் நடந்தபின் வடகொரியா மற்றும் தென்கொரியா நாடுகளுக்கு இடையே சிதறிப்போன குடும்பங்களை இணைக்கும் முயற்சியை மீண்டும் தொடர இரு கொரிய நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
1950 முதல் 1953 வரை நடந்த கொரியப் போரில் பல லட்சக் கணக்கானவர்கள் தங்கள் உறவினர்களிடம் இருந்து பிரிந்தனர். அவர்களில் பலர் மீண்டும் இணையும் முன்பே இறந்து போயினர்.
வரும் ஆகஸ்ட் மாதம் 20 முதல் 26ஆம் தேதி வரை பிரிந்தவர்கள் ஒன்றிணையும் சந்திப்பு நிகழவுள்ளது என்று மவுண்ட் கும்காங்கில் சந்தித்த இருநாட்டு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். கடைசியாக 2015 அக்டோபர் மாதம் இத்தகைய சந்திப்பு நிகழ்ந்தது.
இந்த சந்திப்பில் இரு நாடுகளிலும் இருந்து தலா 100 பேர் பங்கேற்கவுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
- வடகொரியா: கிம் ஜாங்-உன்னின் நம்பிக்கைக்குரிய 9 பேர்
- டிரம்ப் – கிம் ஒப்பந்தம்: இந்த நூற்றாண்டின் ஒப்பந்தமா? வெறும் நீர்க்குமிழியா?
தென்கொரிய செஞ்சிலுவை சங்கத்தில் வடகொரியாவின் வசிக்கும் தங்கள் உறவினர்களைச் சந்திக்க வாய்ப்பு கோரி 57,000 பேர் பதிவு செய்துள்ளனர்.
மீண்டும் ஒன்றிணையும் நிகழ்வில் தங்கள் உறவினர்களைச் சந்திக்கும் நபர்களுக்கு மூன்று நாட்கள் மட்டுமே ஒன்றாக இருக்க அனுமதி கிடைக்கும். பின்பு வாழ்நாள் முழுதும் அவர்களை சந்திக்க முடியாது என்பதைத் தெரித்துகொண்டுதான் அவர்கள் அந்த நிகழ்வுக்கே செல்கின்றனர்.
தென்கொரியா சார்பில் பங்கேற்கும் 100 பேரும், வயது, குடும்ப பின்புலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கணினி மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். அவர்கள் சந்திப்புக்கு முன்பு மருத்துவப் பரிசோதனை மற்றும் அதிகாரிகளுடனான நேர்காணல் ஆகியவற்றுக்கு உள்ளாவார்கள்.
2015இல் நடந்த நிகழ்வில் 650 தென்கொரியர்கள் தங்கள் பிரிந்த உறவுகளை சந்தித்தனர்.
பிரிந்தவர்கள் மீண்டும் சந்திக்க வழிவகை செய்யும் முயற்சி 2000ம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையே நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்தையின்பின் தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்வுகளுக்கு ஒப்புக்கொள்ளவேண்டுமானால், தங்கள் நாட்டிலிருந்து அரசியல் காரணகளுக்காக வெளியேறியவர்களை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்திய வடகொரியா அதற்கு தென்கொரியா ஒப்புக்கொள்ளாதபட்சத்தில் நிகழ்வையே ரத்து செய்த சம்பவங்களும் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளன. -BBC_Tamil