சௌதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்ட விதிக்கப்பட்டிருத்த தடை 24 முதல் முடிவுக்கு வருகிறது. எனினும், பாலின சமத்துவத்துக்கான போராட்டம் அங்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை.
பெண்கள் எங்கு சென்றாலும் கட்டாயம் ஆண் பாதுகாவலர்களின் துணை இருக்க வேண்டும் எனும் சட்டம் சௌதி பெண்களின் அன்றாட வாழ்வில் பெரும் தாக்கம் செலுத்துகிறது.
சமீபத்திய கொள்கை மாற்றங்களால் சௌதி பெண்கள் முதல் முறையாக கால்பந்து விளையாட்டை மைதானத்தில் காண அனுமதிக்கப்பட்டனர். ராணுவ மற்றும் உளவு வேலைகளில் இனிமேல் பெண்களும் சேர முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
பெண்களுக்கான முதல் மிதிவண்டிப் பந்தயமும் சௌதியில் நடந்துள்ளது.
- சௌதி: பெண்களே இல்லாமல் நடந்த பெண்களுக்கான ‘ஃபேஷன் ஷோ’
- வளைகுடா நாடுகளின் தடைகளிலிருந்து சுய முயற்சிகளால் மீண்டெழும் கத்தார்
32 வயதாகும் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் சில சீர்திருத்தங்களைச் செய்ய முயலும்போதிலும், பழமைவாத சமூகமான சௌதி இன்னும் பெண்களுக்கான உரிமையை முழுமையாக வழங்கவில்லை.
சௌதி பெண்களால் தாங்களாகவே இன்னும் செய்ய முடியாத ஐந்து செயல்கள் இதோ.
1. வங்கி கணக்கு திறப்பது
ஆண் பாதுகாவலரின் அனுமதி இல்லாமல் சௌதி பெண்களால் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்க முடியாது.
சௌதி பின்பற்றும் வஹாபிய இஸ்லாம் பெண்களுக்கு கட்டாயமாக ஆண் பாதுகாவலர்கள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
அந்த ஆண் பாதுகாவலர் பெண்களின் தந்தை, சகோதரர், வேறு ஆண் உறவினர் போன்ற யாராகவும் இருக்கலாம். சில நேரங்களில், கணவரை இழந்த பெண்களின் பாதுகாவலராக அவர்களது மகன்களே இருப்பார்கள்.
இந்த முறை மனித உரிமை அமைப்புகளால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறித்து.
2. கடவுச்சீட்டு வாங்குதல் / வெளிநாடுகளுக்கு பயணித்தல்
தங்கள் பெயரில் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வாங்கவும், வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவும் சௌதி பெண்களுக்கு ஆண் பாதுகாவலர்கள் அனுமதி தேவை.
வேலை செய்யவும், படிக்கவும், சில வகையான மருத்துவ சிகிச்சைகளைப் பெறவும்கூட ஆண் பாதுகாவலர்களின் ஒப்புதல் வேண்டும்.
3. திருமணம் மற்றும் மணமுறிவு செய்தல்
திருமணம் செய்யவும், திருமண உறவில் இருந்து விலகவும் சௌதி பெண்களுக்கு ஆண் பாதுகாவலரின் ஒப்புதல் தேவை.
மணமுறிவுக்கு பிறகு ஏழு வயதுக்கும் அதிகமான ஆண் குழந்தைகள் மற்றும் ஒன்பது வயதுக்கும் அதிகமான பெண் குழந்தைகளை வளர்க்கும் உரிமையைப் பெறுவது பெண்களுக்கு மிகவும் கடினமானது.
வேலைக்குச் செல்லும் தங்கள் ஊதியம் பிடுங்கப்படுவதாகவும், விருப்பமற்ற திருமணம் உறவில் கட்டாயமாகத் தள்ளப்படுபவதாகவும் சௌதி பெண்கள் கூறுகின்றனர்.
4. ஆண் நண்பர்களுடன் காஃபி குடித்தல்
சௌதி அரேபிய பெண்களால் உணவு விடுதி ஒன்றுக்குச் சென்று ஆண் நண்பர்களுடன் ஒன்றாக அமர்ந்து ஒரு காஃபி குடிப்பது கூட முடியாது.
உணவகங்களில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி இடங்கள் இருக்கும்.
குடும்பங்கள் மற்றும் பெண்கள் ஓர் இடத்திலும், தனியாகச் செல்லும் ஆண்கள் ஓர் இடத்திலும் சென்று உணவு உட்கொள்ள வேண்டும்.
5. விரும்புவதை அணிவது
பொது இடங்களில் பெண்கள் உச்சி முதல் பாதம் வரை முழு உடலையும் மறைக்கும் ‘அபயா’ எனும் ஆடையைத்தான் அணிய வேண்டும்.
இதைப் பின்பற்றாத பெண்கள் மதக் காவலர்களால் உண்டாகும் பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு முக்கிய மதகுரு, ‘பெண்கள் அபயா அணிவது கட்டாயமல்ல’ என்று கூறியுள்ளார்.
இது வருங்காலத்தில் உண்டாகவுள்ள மாற்றங்களுக்கு ஒரு முன்னோட்டமாக இருக்கலாம். -BBC_Tamil