மெக்சிகோ: ரஷ்யாவில் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியின்போது, தென்கொரிய அணியை 2-1 என்று கணக்கில் மெக்சிகோ அணி வீழ்த்தியது. போட்டியில் பெற்ற வெற்றியை மெக்சிகோ நாட்டில் ரசிகர்கள் பலரும் வீதிகளில் கொண்டாடியுள்ளனர்.
அதேபோல், டெக்சாஸ் எல்லை பகுதியில் உள்ள ஒரு கார் செட்டில் 6 பேர் கால்பந்தாட்ட போட்டியை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென காரில் துப்பாக்கிகளுடன் வந்திறங்கிய மர்ம நபர்கள், சரமாரியாக சுட்டு விட்டு தப்பி சென்றுவிட்டனர். இதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதற்கிடையில், மற்றொரு பகுதியில் உள்ள கடையில் போட்டியை கண்டுகளித்த கடையின் உரிமையாளர்கள் இருவர் மற்றும் வாடிக்கையாளர்கள் 3 பேர் என, 5 ரசிகர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. அதன்பின் நள்ளிரவில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.வெற்றி பெற்ற 24 மணி நேரத்தில் நடைபெற்ற 16 பேர் கொல்லப்பட்ட சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரசிகர்கள் கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தில் ஈடுபட்டது இரண்டு நபர்கள் மட்டுமே என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
-athirvu.in