சீனா அமைதிக்கு உறுதுணையாக இருக்கும், ஆனால் தன் பிராந்தியத்தின் ஒரு அங்குலத்தைக் கூட விட்டுக்கொடுக்காது என அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மேட்டிசுடன் நடைபெற்ற சந்திப்பிற்கு பிறகு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வர்த்தக போர் மற்றும் தென் சீன கடலின் நிலப்பகுதி விவகாரம் தொடர்பாக இரு நாடுகளிடையேயான பதற்றம் அதிகரித்து வருகிறது.
ஜேம்ஸ் மேட்டிஸ், 2014ஆம் ஆண்டிற்கு பிறகு சீனா செல்லும் முதல் பென்டகன் தலைவர் ஆவார்.
ஆசிய பயணத்தின் ஒரு பகுதியாக அவர் சீனா சென்றுள்ளார்.
சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை “நல்ல விதமாக” இருந்ததாக குறிப்பிட்ட ஜேம்ஸ், சீனாவுடனான ராணுவ உறவிற்கு அமெரிக்கா முக்கியத்துவம் அளிப்பதாகவும் தெரிவித்தார்.
அமைதிக்கான நோக்கங்களையே சீனா கொண்டிருந்ததாகவும், ஆனால் சீன பிராந்தியம் என்று தனது நாடு கருதுவதை விட்டுக்கொடுக்க முடியாது என்றும் ஷி ஜின்பிங் கூறினார்.
“எங்கள் மூதாதையர்கள் எங்களுக்கு விட்டுச்சென்ற நாட்டின் ஒரு அங்குலத்தைக்கூட எங்களால் இழக்க முடியாது” என்று ஷி ஜின்பிங் கூறியதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவிக்கிறது.
தென் சீனக்கடலில் சீனாவின் நடமாட்டங்களை, அமெரிக்கா தொடர்ந்து விமர்சித்து வருகிறது. அங்குள்ள செயற்கை தீவுகளில் வசதிகளை உருவாக்குவதன் மூலமாக அண்டை நாடுகளை அச்சுறுத்தவதாகவும் சீனா மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குட்பட்ட இக்கடற்பகுதிக்கு பல நாடுகள் உரிமை கொண்டாடினாலும், இதன் பெரும்பகுதியை சீனாவே உரிமைக் கோருகிறது.
இந்த கடல்பகுதி முக்கிய கப்பல் போக்குவரத்து பாதை மட்டுமல்லாமல் அதிக மீன் வளங்கள் உள்ள பகுதியாகும். மேலும், இங்கு எண்ணெய் வளங்கள் அதிகளவில் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. -BBC_Tamil