அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதினுக்கு இடையே நடைபெறவிருந்த நீண்டகால பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
ஜூலை 16 அன்று ஃபின்லாந்து தலைநகர் ஹெல்ஸின்கியில் நடக்கவுள்ள அந்த சந்திப்பில், ‘பல தேசிய பாதுகாப்பு விவகாரங்கள்’ குறித்து விவாதிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அதிபர் புதின் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
பிரஸல்ஸில் நடைபெறவுள்ள நேடோ பேச்சுவார்த்தைக்கு பிறகு புதினுடனான தனது பேச்சுவார்த்தை நடைபெறும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும் சிரியாவின் போர் குறித்தும் யுக்ரைனில் நிலவும் சூழ்நிலை குறித்தும் விவாதிக்கப்படும் எனவும் டிரம்ப் தெரிவித்தார்.
இதற்கு முன்பாக, வியட்நாமில் நவம்பர் மாதம் ஆசிய பசிஃபிக் சம்மேளனம் நடைபெற்றபோது டிரம்ப் புதின் சந்திப்பு நடைபெற்றது.
இருதலைவர்களுக்கும் இடையே நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தை குறித்து புதன்கிழமையன்று ரஷ்ய வெளியுறவு கொள்கை ஆலோசகர் யூரி உஷாகோவால் அறிவிக்கப்பட்டது.
இருநாடுகளுக்கும் அருகாமையில் ஒரு மூன்றாம் நாட்டில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவித்த அவர் இடம் மற்றும் நேரம் இன்று அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசிய அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், பேச்சுவார்த்தை குறித்து ரஷ்ய அதிகாரிகளுடன் ஆலோசிக்க டிரம்ப் கோரியதாக தெரிவித்தார்.
- டிரம்ப் – கிம் உச்சிமாநாடு: உலக நாடுகள் சொல்வது என்ன?
- புதின் ஏன் சிரிக்கிறார்? : புதின் குறித்து கூகுளில் தேடப்பட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும்
இருநாட்டு உறுவுகளையும் மேம்படுத்த இரு அதிபர்களும் விரும்புவதாக போல்டன் தெரிவித்தார்.
“முக்கிய நாடுகளான ரஷ்ய மற்றும் அமெரிக்கா சேர்ந்து தங்களுக்கான பிரச்சனை குறித்தும், சேர்ந்து பணிபுரியக்கூடிய துறைகள் குறித்தும் விவாதிப்பது அவசியம் என இருநாட்டு தலைவர்களும் விரும்புகின்றனர். இது அமெரிக்க-ரஷ்ய இடையேயான உறவை மேம்படுத்தும் என்றும் உலகில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டும்” என்றும் போல்டன் தெரிவித்தார்.
ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நல்லுறவு இல்லை என்பதை முன்னதாக ஒப்புக்கொண்ட புதின், போல்டனுடான தனது சந்திப்பு இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் என்ற நம்பிக்கையை வழங்கியதாக தெரிவித்தார்.
ரஷ்யா என்றைக்கும் மோதல் போக்கை கடைபிடித்ததில்லை என்று தெரிவிக்கும் புதின், அமெரிக்க உள்நாட்டு அரசியலில் நிலவும் மோதல்களே அதற்கு காரணம் என நம்புகிறார். -BBC_Tamil