குழந்தைகள் கொல்லப்படும் விகிதம் அதிகரிப்பு – ஐ.நா. அதிர்ச்சி தகவல்..

சமீபத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு நடத்திய ஆய்வு ஒன்றில், மோதல்களினால் குழந்தைகள் அதிக அளவில் கொல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் உள்நாட்டு போர்களும், பயங்கரவாத எதிர்ப்பு போர்களும் ஆங்காங்கே நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. ஒரு காலத்தில் இந்தியாவில் மட்டுமன்றி, உலக நாடுகள் அனைத்திலும், சிறிய மோதல் ஏற்பட்டால் கூட பெண்களையும் குழந்தைகளையும் காப்பதும், அவர்களை கொல்லாது இருப்பதுமே வீரமாக கருதப்பட்டது.

ஆனால், இந்த மரபை மாற்றி எழுதும் வகையில், ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வெளியிட்டுள்ள அறிக்கை அமைந்துள்ளது. சிறுவர்கள் மற்றும் ஆயுத மோதல்கள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பல்வேறு கலவரங்களில், மோதல்களில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 10 ஆயிரம் குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சுமார் 8 ஆயிரம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராளிகளாக தங்களை மாற்றிக் கொண்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையானது இந்தியா உட்பட சுமார் 20 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. 9 அரசு படைகளும், 57 ஆயுதம் ஏந்திய குழுக்களும் என மொத்தம் 66 குழுக்கள் மோதல்களில் ஈடுபடுவதாக ஐ.நா. வல்லுநர் விர்ஜினியா கம்பா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய விர்ஜினியா கம்பா, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, பள்ளிகளிலும், மருத்துவமனைகளிலுமே அதிக அளவில் தாக்குதல் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார்.

மத்திய ஆப்ரிக்க குடியரசு, காங்கோ, மியான்மர், தெற்கு சூடான், சிரியா, ஏமன் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட மோதல்களிலேயே அதிக அளவில் குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதாக கூறிய அவர், நைஜீரியாவில் மனித வெடிகுண்டுகளாக குழந்தைகள் உபயோகிக்கப்பட்ட மோசமான நிகழ்வை அதற்கு உதாரணமாக சுட்டிக்காட்டினார்.

ஈராக் நாட்டில் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக ஆயிரம் குழந்தைகள் கைது செய்யப்பட்ட நிகழ்வை சுட்டிகாட்டி பேசிய கம்பா, இதுபோன்று சந்தேகத்தின் அடிப்படையில் குழந்தைகள் கைதாவது குறித்தும் தாம் கவலை அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கை தொடர்பாக பேசிய ஐ.நா.பொதுச்செயலாளர், அனைவரும் ஒன்றிணைந்து இந்த வன்முறையை போக்குவதற்கு அமைதியை பரப்ப வேண்டும் எனவும், வன்முறையில் இருந்து மீள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

-athirvu.in