‘இஸ்லாத்தை தீவிரமாகப் பின்பற்றுகின்ற ஈரான் போன்ற நாட்டில் கூட யூதர்களுக்கு நாடாளுமன்றத்தில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. நீங்கள் அந்த விஷயத்தைக் கற்பனை செய்து கூடப் பார்த்திருக்க மாட்டீர்கள்.”
தேர்தல் நடைமுறைகள் இந்தியர் உரிமைகளை எப்படிப் பறிக்கின்றன?
காத்ரின்55: சிலாங்கூர், நெகிரி செம்பிலான், கூட்டரசுப் பிரதேசம், பேராக், பினாங்கு ஆகியவற்றில் இரண்டு மில்லியன் வாக்காளர்கள் உள்ளனர். ஆனால் நாடாளுமன்றத்தில் இந்தியர்களைப் பிரதிநிதிப்பதற்கு ஒரு தொகுதி கூட உருவாக்கப்படவில்லை.
அம்னோவின் நோக்கம் தெளிவானது. ஆனால் பக்காத்தான் ராக்யாட்டின் போக்கு கூட நமக்கு வியப்பைத் தருகிறது. பக்காத்தானில் இந்தியர்களுக்கு ஒன்றுமில்லை என்றுதான் தெரிகிறது.
ஒரு காலத்தில் மேலாண்மைக்காகப் போராடிய தீவிர வலச்சாரி ஒருவர் அதற்குத் தலைவராக இருக்கும் போது நீங்கள் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? அத்துடன் தமக்கு வாக்களித்த மக்களையே வெளியேற்றிய முதலாளித்துவ “தவக்கேயும்” அந்தக் கூட்டணியில் இருக்கிறார்.
நான் பாஸ் பற்றியும் அதன் இஸ்லாமிய நிகழ்ச்சி நிரல் பற்றியும் பேச வேண்டிய அவசியமில்லை. ஹிண்ட்ராப் எழுச்சிக்குப் பின்னரும் இந்தியர்களை ஏய்க்க முடியும் என எண்ணும் மக்கள் மலேசியாவில் இன்னும் இருப்பதுதான் வினோதமாக இருக்கிறது.
நமது பல இன சமுதாயத்தில் ஹிண்ட்ராப்-பும் மனித உரிமைக் கட்சியும் தங்களது பங்கை ஆற்றி வருகின்றன. ஜனநாயக மாற்றத்துக்கு அது தொடர்ந்து முக்கிய சக்தியாக விளங்கி வரும்.
உங்கள் அடிச்சுவட்டில்: தேர்தல் தொகுதி ஒதுக்கீடுகள் இந்தியர்களை மட்டும் பாதிக்கவில்லை. சீனர்களையும் பாதிக்கிறது. ஆகவே நாம் உண்மையான பல இன சமுதாயப் பிரதிநிதித்துவத்தைக் கொண்டு வர நாம் சரியான சிந்தனையைக் கொண்ட மலாய்க்காரர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
பிஎன் அல்லது பக்காத்தான் இதில் யார் இந்தியர்களுக்கு நன்மையைத் தரப் போகின்றனர் என்பதை பி உதயகுமார் முடிவு செய்ய வேண்டும்.
அவர் பக்காத்தான் மீது கடுமையான போக்கைப் பின்பற்றுகிறார். ஆனால் இந்தியர்களை பிஎன் -னும் அவர்களுடைய சொந்த சமூகத் தலைவர்களும் பல தசாப்தங்களாக தவறாக வழி நடத்தி வந்துள்ளதை அவர் மறந்து விட்டதாகத் தெரிகிறது.
இரண்டு கட்சி முறைக்குள் யார் கூடுதல் நன்மையைத் தருவர் என்பதை அவர் முடிவு செய்ய வேண்டும். கருத்து வேறுபாடுகள் ஐக்கியத்தை மேலும் சீர்குலைக்கும்.
ஹிண்ட்ராபு-க்குள் மட்டும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் உதயகுமாரை இனிமேலும் ஆதரிக்க நான் விரும்பவில்லை. பக்காத்தானுக்குள் இந்திய சமூகத்திற்கு கூடுதல் உதவிகளும் உரிமைகளும் கிடைப்பதையே நான் நாடுகிறேன்.
பிளாக்னைட்: அது நல்ல ஆய்வு. பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உதவும் உங்கள் பணியை நான் மதிக்கிறேன். இந்தியர்களுக்குக் கூடுதல் பிரதிநிதித்துவம் இருந்தால் இந்தியர்களுக்குக் கூடுதல் வாய்ப்புக் கிடைக்கும் என்ற வாதத்திற்கு 1970ம் ஆண்டு முதல் நிலவும் சூழ்நிலைகள் சாதகமாக இல்லை.
இந்திய வாக்காளர்கள் அதிக விகிதாச்சாரத்தில் இருந்த தொகுதிகளிலிருந்து தேர்வான எஸ் சாமிவேலு போன்ற தலைவர்கள் சமூகத்தை முழுமையாக விற்று விட்டனர். உண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மஇகா பேராளர்களில் பெரும்பாலோர் கணிசமான இந்திய வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகளாகும். ஆனால் அவர்களே இந்திய சமூகத்துக்கு துரோகம் செய்து விட்டனர்.
அவர்களில் சிலரை நான் கூறுகிறேன் – வி மாணிக்கவாசகம், எஸ் சுப்ரமணியம், கே குமரன், எம்ஜி பண்டிதன், எஸ் வீரசிங்கம், கே சிவலிங்கம், எஸ் சோதிநாதன், கே தேவமணி ஆகியோர். அவர்கள் தொடக்கத்தில் அனல் பறக்கப் பேசினார்கள். ஆனால் அவர்கள் பின்னர் ‘இந்தியர் கோட்டாவை’ பயன்படுத்தி நாட்டின் கருவூலத்தைக் கறப்பதில் தங்களது அம்னோ சகோதரர்களுடன் சேர்ந்து கொண்டார்கள்.
நான் சொல்வது சற்று அதிகமாக இருக்கலாம். கடந்த காலத்தில் அதுதான் நிகழ்ந்துள்ளது. உதயாவும் அதே வழியில் செல்ல மாட்டார் என்பது என்ன நிச்சயம்?
பார்வையாளன்: மலேசிய அரசியலில் இனம் முக்கியப் பங்காற்றுகின்றது என்பதே உண்மை நிலையாகும். தேர்தல் காலத்தின் போது ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள இன விகிதாச்சரத்தை ஊடகங்கள் வெளியிடுவதிலிருந்து அதனை நாம் அறிந்து கொள்ள முடியும்.
பிஎன் -னும் பாக்காத்தானும் பல இன வேட்பாளர்களை நிறுத்தினாலும் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால் தங்களுக்கு அதிக வாக்குகளைத் தரக் கூடிய சமூகங்களின் நலன்களில் அவை தீவிர அக்கறை காட்டுவதை தவிர்க்க முடியாது. அப்போது இந்த நாட்டில் வாழ்கின்ற இரண்டு பெரிய சமூகங்களில் மட்டுமே அவை கவனம் செலுத்தும். மற்ற சிறிய சமூகங்கள் ஒதுக்கப்படுவது திண்ணம்.
உதயா சுட்டிக் காட்டியிருப்பது போல பல நாடுகள் சிறுபான்மை சமூகங்களின் நலன்களைப் பாதுகாக்க பல வகையான தீர்வுகளை அமல்படுத்தியுள்ளன. ஆனால் மலேசியாவில் பெரும்பான்மை மலாய்க்காரர்களுக்கு நியாயமற்ற முறையில் சாதகமாக இருக்கும் வகையில் அம்னோ தேர்தல் தொகுதிகளை வரைந்துள்ளது.
அதனால் அம்னோ மற்ற சமூகங்களை ஒரங்கட்டுகிறது. சிறுபான்மை மக்களுடைய நலன்களை சிறுபான்மை சமூகங்களுடைய உண்மையான பிரதிநிதிகளே எடுத்துக் கூற முடியும். ‘மண்டோர்களினால்’ அல்ல.
அடையாளம் இல்லாதவன்: இஸ்லாத்தை தீவிரமாகப் பின்பற்றுகின்ற ஈரான் போன்ற நாட்டில் கூட யூதர்களுக்கு நாடாளுமன்றத்தில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. நீங்கள் அந்த விஷயத்தைக் கற்பனை செய்து கூடப் பார்த்திருக்க மாட்டீர்கள்.