அமெரிக்கா விலகல், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக வல்லரசு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

தெக்ரான், 2015-ம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அணு சக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்று ஈரான் உறுதியளித்தது. இதை ஏற்று அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகளும் நீக்கப்பட்டது. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன், ஈரானுடனான அணுஆயுத ஒப்பந்தத்தை பைத்தியக்காரத்தனமானது என்று விமர்சனம் செய்தார். அதன்படி ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது.

அதனைத் தொடர்ந்து ஈரான் மீது பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது. இதற்கிடையே கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் இருந்து ஈரானை அகற்ற துடிக்கும் அமெரிக்கா,  இந்தியா, சீனா உள்ளிட்ட உலக நாடுகள் நவம்பர் மாதத்துக்குள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் பொருளாதார தடையை எதிர்க்கொள்ள வேண்டியது இருக்கும் என எச்சரிக்கையை விடுத்துள்ளது. அமெரிக்கா ஈரானுக்கு எதிரான நடவடிக்கையை துரிதப்படுத்த துடிக்கும் நிலையில்,  அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக வல்லரசு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தையை மேற்கொள்கிறது.

அஸ்திரியா தலைநகரில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில், ஈரான், பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ரஷியாவின் வெளியுறவுத்துறை மந்திரிகள் கலந்துக்கொள்கிறார்கள். அப்போது, இப்போது எழுந்துள்ள பதற்றமான நிலை தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது என ஈரான் நாட்டு அரசு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்கா விலகி இரண்டு மாதங்கள் ஆன பின்னர் கூட்டம் நடைபெறுவதால் பெரும் முக்கியத்தும் பெறுகிறது. “ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுதல் என்ற அமெரிக்காவின் சட்டவிரோத நகர்வை அடுத்து ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை பாதுகாக்கும் தீர்வுகள் தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-dailythanthi.com