சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட எதிர்ப்பு: இளம்பெண் கார் எரிப்பு

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்ட தடை கடந்த மாதம் 24ம் தேதி நீக்கப்பட்டது. இதற்கு பெண்களிடையே பலத்த ஆதரவு கிடைத்து உள்ளது. இதுவரையிலும் சுமார் 120,000 பெண்கள் ஓட்டுநர் உரிமம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

இந்த நிலையில் சவுதி அரேபியாவில் 31 வயதான சல்மா அல் ஷரிப் என்ற பெண்ணின் கார் மெக்காவுக்கு அருகே நள்ளிரவில் எரிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய பாதி சம்பளம் முழுவதும் பயணச்செலவுகளுக்காக மட்டுமே வீணாவதாக கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த சல்மா, தடைநீக்கத்தால் மிகவும் உற்சாகமாக இருந்தாராம். மறுநாள் அவரது காரை ஓட்டிச் சென்ற போதே, அக்கம்பக்கத்து ஆண்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெண்கள் கார் ஓட்ட வழங்கப்பட்ட அனுமதியை அவர்கள் எதிர்த்துள்ளனர். எனினும் குடும்ப செலவுகளுக்காக வேலைக்கு சென்று வந்துள்ளார் சல்மா. இந்நிலையில் நேற்று இவரது காரை தீவைத்து எரித்துள்ளனர், இச்சம்பவம் உள்ளூர் ஊடகங்களில் பெரும் விவாதத்துக்கு உள்ளானது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

-dailythanthi.com