தாய்லாந்தில் குகை ஒன்றில் கடந்த 9 நாட்களாக சிக்கியிருந்த 12 சிறுவர்களும் அவர்களின் பயிற்சியாளர் ஒருவரும் உயிருடன் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டமை தாய்லாந்திலும் சர்வதேச ரீதியிலும் பெரும் மகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.
ஆயினும் இவர்கள் அனைவரையும் உடனடியாக குகையிலிருந்து மீட்கமுடியாத நிலைமை தற்போது புதிய கவலைகளையும் பெரும் சவாலையும் ஏற்படுத்தியுள்ளது.
குகைக்குள் அதிகளவு வெள்ளநீர் சூழ்ந்திருப்பதால் இவர்களை மீட்டு வெளியே கொண்டுவர பல வாரங்கள் ஆகலாம் என தெரிவிக்கபடுகிறது.
தாய்லாந்தை பொறுத்தவரை அதன் பிரதமர் பிரயுத் சான்-ஓ-சான் குறிப்பிட்டதைப்போல இன்று ஒரு நல்ல நாளாகவே அடையாளப்படுத்தப்பட்டது.
ஏனெனில் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை மையப்படுத்தி கடந்த 9 நாட்களும் வாழ்வா? சாவா என்ற பின்னணியுடன் மிகப்பெரிய தேடுதலுக்கு மகிழ்ச்சியான விடைகிட்டியுள்ளது
11 வயது முதல் 16 வயதுடைய மேற்படி சிறார்களும் அவர்களின் பயிற்சியாளரும் கடந்த 23 திகதியன்று இந்த குகையை சுற்றிப் பார்க்க சென்றபின்னர் மீண்டும் வெளியே வரவில்லை.
இதனால் இவர்களை தேடி மிகப்பெரிய தேடுதல் வேட்டை நடத்தபட்டது, ஆயினும் கடும் மழை காரணமாக குகைக்குள் நீர்மட்டம் அதிகரித்ததால் தேடுதல் பணி தாமதமடைந்தது.
இந்த நிலையில் இந்த சிறுவர்களை மீட்கும் பணியில் உதவ பிரித்தானிய நிபுணர்கள் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த பலர் இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இவ்வாறு நேற்று (02.07.2018) மேற்கொள்ளபட்ட தேடுதல் நடவடிக்கையின் போது காணாமற்போன சிறார்களும் அவர்களின் பயிற்சியாளரும் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களின் குரல்களும் முதற்தடவையாக கேட்கப்பட்டது காற்று நிறைந்த ஒரு உலர்ந்த பகுதியில் இவர்கள் இருந்தனர்
குகையிலுள்ள சிறுவர்களிடம் நீங்கள் எத்தனை பேர் உள்ளீர்கள்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, பதின்மூன்று பேரென பதில் வந்தது.
இவர்கள் அனைவரும் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதை தாய்லாந்தின் ராணுவ ஜெனரல் அதிகார பூர்வமாக உறுதிப்படுத்தியிருந்தார்.
ஆனால் சிறார்கள் கண்டுபிடிக்க பட்டாலும் குகையில் நீர் மட்டம் அதிகரிப்பதால் அவர்களை உடனடியாக வெளியே கொண்டுவரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது
இதற்காக நீர் வடியும் வரை சில மாதங்கள் கூட அங்கேயே காத்திருக்கவேண்டும் என கூறப்படுகிறது, இல்லையென்றால் அவர்கள் அனைவரும் சிறுவர்கள் நீருக்கடியில் நீச்சலடிக்கு கலையை கற்று நீந்திவரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே கடும் சாவால்களுடன் மீட்புப்பணிக் குழு உணவு மற்றும் மருந்து பொருட்களை குகைக்குள்ளே அனுப்பியுள்ளது, மருத்துவர்கள் மற்றும் தாதிகளை உள்ளே அனுப்பும் நகர்வுகளும் எடுக்கபட்டு வருகின்றன.
இன்னும் குறைந்தது நான்கு மாதங்களுக்கு அவர்களுக்கு உணவு வினியோகம் செய்யப்படும் என ராணுவம் கூறியுள்ளது.
காணாமல்போன தமது பிள்ளைகள் உயிருடன் இருக்கும் உற்சாகமான செய்தியால் குகைக்கு வெளியே கடந்த 9 நாட்களும் தங்கியிருந்த பெற்றோர்கள் மகிழ்வடைந்துள்ளனர்.
-athirvu.in