சீனா – அமெரிக்கா பொருளாதார சண்டை எப்படி நம்மை பாதிக்கும்?

இங்கு தனித் தனி என்று எதுவும் இல்லை. உலகம் ஒரு வலையாகிவிட்டது. ஒரு இழையில் உள்ள பிரச்சனை நிச்சயம் இன்னொரு இழையை பாதிக்கும். இது இப்போது சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் நடக்கும் பொருளாதார சண்டைகளுக்கும் பொருந்தும்.

இந்த பொருளாதார சண்டை சாமானியர்களை எப்படி பாதிக்கும் என்பதை இங்கு காண்போம்.

பழிக்கு பழி

இது அமெரிக்காவில்

சீன பொருட்கள் சிலவற்றுக்கு 25 சதவீதம் அளவுக்கு அமெரிக்காவில் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வானது வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது. அதாவது இனி அமெரிக்கர்கள் அந்த பொருட்களை 25 சதவீதம் அதிக விலை கொடுத்துதான் வாங்க வேண்டும்.

குறிப்பாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் கணினி, கைபேசி, தொலைக்காட்சி, மடிக்கணினியில் பொருத்தப்படும் சிப்புகள் அகியவற்றுக்கு வரி உயர்த்தப்பட்டு இருக்கிறது. இனி இந்த பொருட்கள் அமெரிக்காவில் முந்தைய விலைக்கு கிடைக்காது.

இது மட்டுமல்லாமல், பிளாஸ்டிக் முதல் அணு உலை வரை உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களுக்கு வரி உயர்த்தப்பட்டு இருக்கிறது.

பல்வேறு தயாரிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களுக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளதால் இதன் தாக்கம் பல்வேறு பொருட்களின் விலையில் எதிரொலிக்கும் என்கிறது பீட்டர்சன் சர்வதேசப் பொருளாதார மையம்,

இதற்கு பழிக்குப் பழியாக சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கு கடுமையான வரி விதித்துள்ளது.

இது சீனாவில்

சீனா இதனை மிகவும் தந்திரமாக எதிர்கொண்டுள்ளது. அதாவது அமெரிக்க அதிபரின் வாக்கு வங்கியாக கருதப்படும் விவசாயிகள் மீது தாக்கம் செலுத்தும் வகையில் தனது வரி விதிப்புகளை மாற்றி உள்ளது.

சீனா - அமெரிக்கா பொருளாதார சண்டை எப்படி நம்மை பாதிக்கும்?

சீனா வரி விதித்துள்ள 545 பொருட்களில் 91 சதவீதப் பொருள்கள் விவசாய துறை சார்ந்தவை.

அதுபோல, கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, கிரிஸ்லரின் தயாரிப்புகளுக்கு வரி விதிப்புகளை உயர்த்தி உள்ளது சீனா. சீனச் சந்தையில் நுழையும் இந்த தயாரிப்புகளுக்கு இனி பாதிப்பு இருக்கலாம்.

மருத்துவப் பொருட்கள், நிலக்கரி, பெட்ரோலியம் ஆகியவற்றுக்கும் மிகக் குறைவாக வரியை உயர்த்தி உள்ளது சீனா.

அச்சமூட்டும் விளைவுகள்

சீனா நெஞ்சை உயர்த்தி இந்த வரி விதிப்புகளை எதிர்கொண்டு இருந்தாலும், உண்மையில் இதன் விளைவுகள் அச்சமூட்டுவதாக உள்ளன. அதாவது இந்த வரி விதிப்பு சண்டையின் தாக்கம் ஆசியா முழுவதையும் பாதிக்கலாம்.

சில்க் ரோடு ரிசர்ச் நிறுவனத்தின் இயக்குநர் வினேஷ் மோத்வானி, “சீனாவில் உள்ள எங்கள் தொடர்புகள், ‘நிலைமை மிக மோசமாக உள்ளது’ அல்லது ‘பயமுறுத்துவதாக உள்ளது’ என்கின்றன” என்கிறார்.

வணிக சூழ்நிலைகளை பார்ப்பதற்காக அன்மையில்தான் அவர் சீனப் பெரு நிலப் பகுதிக்கு சென்று வந்திருக்கிறார்.

அங்குள்ள ஸ்திரத்தன்மை காரணமாக அங்குள்ள வணிக நிறுவனங்கள், விரிவாக்கத்தை கிடப்பில் போட்டுவிட்டன. இதன் தாக்கமானது ஆசிய அளவில் இருக்கும் என்று கருதப்படுகிறது.

இரு நாடுகளுக்கு மட்டும் பாதிப்பு அல்ல

இந்த பொருளாதார சண்டையானது இரு நாடுகளை மட்டும் பாதிக்காது. இதனுடன் அழுத்தமான வணிகத் தொடர்புடைய பிற நாடுகளும் பாதிக்கப்படும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

சீனா - அமெரிக்கா பொருளாதார சண்டை எப்படி நம்மை பாதிக்கும்?

டிபிஎஸ் நிறுவனத்தின் தலைமை பொருளாதார வல்லுநர் தைமூர் பெய்க், இரு நாட்டு பொருளாதார வளர்ச்சியிலும் இது பாதிப்பை உணடாக்கும். உள்நாட்டு உற்பத்தியானது 0.25 சதவீதம் வரை குறையும் என்கிறார்.

மேலும் அவர், “சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6 -7 சதவீதம் என்ற அளவிலும், அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி 2 – 3 சதவீதம் என்ற அளவில் இருக்கிறது. அதனால், சீனாவை விட அமெரிக்காதான் மோசமாக பாதிக்கப்படும் என்று தெரிகிறது” என்கிறார்.

இந்த இரு நாடுகளுடன் விநியோக சங்கிலியில் ஏற்படும் பிரச்சினையால் தென் கொரியா, தைவான், சிங்கப்பூரையும் இந்த பொருளாதார சண்டை பாதிக்கும் என்கிறார் தைமூர் பெய்க்.

எந்த அளவுக்கு மோசமடையும்?

இதனால் தாங்கள் மிகவும் மோசமான பாதிப்புக்கு உள்ளாவோம் என்று எலோன் முஸ்க்கின் நிறுவனமான டெஸ்லா விளக்கி உள்ளது. சீனா சந்தை தங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று முஸ்க் கூறி உள்ளார்.

சரி இது எந்தளவுக்கு இன்னும் மோசமடையும்? உண்மையில் இதன் விளைவுகள் யாருக்கும் தெரியாது என்கிறது சில்க் ரோட் ரிசர்ச் நிறுவனம்.

வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால் இது மோசமான விளைவுகளை கொண்டு வரும் என்றே தெரிகிறது.

அனைத்து பெரும் வணிகர்களும் இரு நாடுகளும் பேச்சு வார்த்தையில் அமரும் என்று நம்புகின்றனர். அப்படி இல்லாதபட்சத்தில் பலரின் பொருளாதாரத்தையும் இது பாதிக்கலாம். ஏன் நம்மையும் கூட பாதிக்கலாம். -BBC_Tamil