வட கொரியாவின் அணு திட்டம் பற்றிய சமீபத்திய பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் மனநிலை வருத்தமளிக்கிறது என்று வட கொரியா தெரிவித்துள்ளது.
சில மணிநேரங்களுக்கு முன்னர் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பாம்பேயோ தெரிவித்த நிகழ்வுகளின் கருத்துக்கு முரணாக பெயர் தெரிவிக்கப்படாத வெளியுறவு அமைச்சக அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வட கொரியாவில் தங்கியிருந்த 2 நாட்களிலும் இந்தப் பிரச்சனை பற்றிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டதாக பாம்பேயோ தெரிவித்திருந்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், வட கொரிய தலைவர் கிம்-ஜாங்-உன்னும் சிங்கப்பூரில் நடத்திய உச்சி மாநாட்டுக்கு பின்னர், மைக் பாம்பேயோ வட கொரியாவில் பயணம் மேற்கொள்வது இது முதல்முறையாகும்.
வட கொரியாவின் அதிகாரபூர்வ கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், வட கொரியாவின் அணு ஆயுதங்களை கைவிடுவதற்கு தன்னிச்சையாக அழுத்தம் கொடுப்பதன் மூலம் சிங்கப்பூர் உச்சி மாநாட்டின் நோக்கத்திற்கு எதிராக அமெரிக்கா சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணு ஆயுத ஒழிப்புக்கு வட கொரியாவிடம் இருந்து உறுதியை பெற்றுக்கொள்வதே பாம்பேயேவின் 2 நாட்கள் பயணத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.
வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங்-உன்னின் வலது கரமாக பரவலாக பார்க்கப்படும் கிம் யாங்-சோலை பாம்பேயோ சந்தித்தார்.
ஏவுகணை சோதனை உள்பட ஆயுத ஒழிப்புக்கான காலம் பற்றி அவர்கள் விவாதித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“சிக்கலான பிரச்சனைகள் உள்ளன. முக்கிய பிரச்சனைகள் எல்லாவற்றியும் ஏறக்குறைய முன்னேற்றம் அடைந்துள்ளோம். இதர விடயங்கள் பற்றி இன்னும் பேச வேண்டியுள்ளது” என்று இந்த சந்திப்பு பற்றி வட கொரியா முரண்பட்ட கருத்தை தெரிவிப்பதற்கு சற்று முன்னர்தான் பாம்பேயோ தெரிவித்தார்.
- “வட கொரியா இன்னும் அச்சுறுத்தல்தான்” – அமெரிக்க அதிபர் டிரம்ப்
- டிரம்ப் – கிம் சந்திப்பு: என்ன சொல்கிறார்கள் தென்கொரிய தமிழர்கள்?
- டிரம்ப் – கிம் உச்சிமாநாடு: 4 முக்கிய பிரகடனங்கள்
அணு ஆயுத ஒழிப்புக்கான பணிகளை மேற்கொள்ள கிம் ஜாங்-உன் உறுதி அளித்துள்ளார். ஆனால், அது எவ்வாறு செய்யப்படும் என்பது தெளிவாக தெரியவில்லை.
சிங்கப்பூரில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் வட கொரியாவின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கியும், தென் கொரியாவோடு நடத்துகின்ற ராணுவ பயிற்சியை முடிவுக்கு கொண்டு வருவதாகவும் அமெரிக்க உறுதியளித்தது.
அதன் பின்னர், வட கொரியா அணு அச்சுறுத்தல் கொண்ட நாடாக இனிமேலும் இல்லை என்று டிரம்ப் தெரிவித்தார்.
இருப்பினும், வட கொரியா அதனுடைய அணு மற்றும் ஏவுகணை திட்டங்களின் உள்கட்டுமானங்களை மேம்படுத்துவதை தொடர்ந்து வருவதற்கு சான்றுகள் இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ள நிலையில், வட கொரியா மீதான தடைகளை அமெரிக்க அதிபர் புதுப்பித்துள்ளார்.
டிரம்ப் – கிம் வரலாற்று சந்திப்பு நிகழ்ந்தது இப்படிதான்
அணு ஆயுத ஒழிப்பு, பாதுகாப்பு உறுதிப்பாடுகள், கொரிய போரிலிருந்த அமெரிக்க அதிகாரிகளின் எச்சங்களை வழங்குவது ஆகியவற்றை வலியுறுத்தி பாம்பேயோ மிக உறுதியாக இருந்ததாக வெளியுறவு துறை செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
வட கொரிய விருந்தினர் இல்லத்தில் இரவு முழுவதும் பாம்பேயோ சரியாக தூங்காமல் இருந்திருக்கலாம் என்று கிம் யாங்-சோல் நகைச்சுவையாக தெரிவித்தார். ஆனால் தான் நன்றாக தூங்கியதாக பாம்பேயோ கூறிவிட்டார்,
ஞாயிற்றுக்கிழமையன்று ஜப்பான் மற்றும் தென் கொரியாவின் வெளியுறவு அமைச்சர்களை அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் டோக்கியோவில் சந்திக்கவுள்ளார். -BBC_Tamil