““புதிய தலைமுறை” டிஏபி தலைவர்கள் அந்தக் கட்சியைக் கீழறுப்புச் செய்து அதனை “இழிச்சொற்களையே கொண்ட கட்சி என்னும் நிலைக்கு” தாழ்த்தி விட்டதாக மசீச மகளிர் பிரிவு கூறுகிறது.
தங்கள் தலைவர்கள் பிஎன் சகாக்கள் பற்றிக் கெட்ட வார்த்தைகளைப் பேசுவதை அனுமதிக்கும் டிஏபி-யையும் அது சாடியது.
இவ்வாறு மசீச மகளிர் பிரிவுத் தலைமைச் செயலாளர் செனட்டர் சியூ லீ கியோக் ஒர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
“நடப்பு ஆயுட்கால ஆலோசகர் டாக்டர் சென் மா ஹின், முன்னாள் தலைமைச் செயலாளர் சிவி தேவன் நாயர் போன்ற கடந்த தலைமுறைத் தலைவர்கள் அரசியலில் நேர்மையைக் காட்டினார்கள்.”
“ஆனால் நடப்பு டிஏபி தலைவர்கள் அடிக்கடி கெட்ட வார்த்த்தைகளைச் சொல்கின்றனர். அவர்கள் அது குறித்து பெருமை கொள்வது அதை விட மோசமானது. அது கட்சிக் கோட்பாடுகளையே சீர்குலையச் செய்துள்ளது.”
அவர் இதர பல சம்பவங்களுடன் நேற்று பேராக் மாநிலச் சட்டமன்றத்தில் பந்தாய் ரெமிஸ் உறுப்பினர் இங்கா கோர் மிங், ‘அரசியல் விபச்சாரி’ என்னும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
“ஒருவரை விபச்சாரி எனச் சொல்வது அவரை மிகவும் அவமானப்படுத்துவதற்கு ஒப்பாகும். யாருடனும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இங்கா கோர் மிங் அவ்வாறு சொல்லியிருக்கக் கூடாது,” என சியூ சொன்னார்.