600 மக்கள் – 30 லட்சம் பாம்புகள் – ஒரு வினோத கிராமம்..

30 லட்சம் பாம்புகளுக்கு இடையில் சுமார் 600 மக்கள் மட்டுமே வாழும் கிராமம் ஒன்று சீனாவில் உள்ளது. இதற்கான காரணம் என்னவென்று தெரிந்து கொள்வோமா?

சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள செஜியாங் மாகாணத்தின் கடைக்கோடியில் இருக்கும் குக்கிராமம் சிசிகியாவ். சுமார் 600 மக்கள் மட்டுமே வாழும் இந்த கிராமத்தில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களது உடல்களின் பல பகுதிகளில் பாம்புக்கடி அடையாளங்களுடன்தான் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஏன் இந்த நிலை?

சீனர்களின் அசைவ உணவில் பாம்புக்கறிக்கு முதலிடம் உண்டு. மிகவும் வறட்சியால் பாதிக்கப்பட்ட இந்த கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இருந்துள்ளது. நிலப்பரப்பில் மட்டுமின்றி, இங்குள்ள நீர்நிலைகளிலும் மீன்களைவிட பாம்புகளின் ஆதிக்கம்தான்.

பசிக்கு உணவாக பயன்படுத்தப்பட்ட பாம்புகள் இங்குள்ள மக்களுக்கு செல்வத்தை அள்ளித்தரும் அமுதசுரபியாக பிற்காலத்தில் மாறின. இதனால், பிறபகுதிகளில் உள்ள மக்கள் இந்த கிராமத்தை ‘பாம்பு கிராமம்’ என்றே பிற்காலத்தில் அழைக்க தொடங்கி விட்டனர்.

இறைச்சியாக மட்டுமின்றி, பல்வேறு கொடிய நோய்களை தீர்க்கும் அருமருந்தாகவும் பாம்புகள் பயன்படுவதால் பாம்புப் பண்ணைகளும், பாம்பு வர்த்தகமும் இங்கு நாளடைவில் பல்கிப் பெருகியது.

இந்த தொழிலுக்கு ஆரம்பத்தில் பிள்ளையார் சுழி போட்டவர் யாங் ஹாங்சாங். இவரை உள்ளூர் மக்கள் “பாம்புகளின் ராஜா” (snake king) என்று அன்புடன் அழைத்து மகிழ்கின்றனர்.

1970-ம் ஆண்டுவாக்கில் முதன்முதலாக பாம்பு பண்ணையை ஏற்படுத்தி, பாம்பு முட்டைகளை சேகரித்து, அடைகாத்து, குஞ்சுகளை பொறிக்கவைக்க யாங் ஹாங்சாங் முயன்றபோது அது பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. வெறும் பத்து சதவீதம் முட்டைகள் மட்டுமே பொறித்தன.

ஆனால், மனம் தளராமல் இவர் எடுத்த பெருமுயற்சிகளின் பலனாக அடுத்த ஆண்டிலேயே சுமார் 30 ஆயிரம் முட்டைகள் குஞ்சு பொறித்திருந்ததால் அந்நாட்களில் மிகப்பெரிய பாம்பு பண்ணையின் அதிபராக மாறினார் யாங்.

1983-ம் ஆண்டுவாக்கில் சீனாவில் வாழ்ந்த மக்களின் சராசரி ஆண்டு வருமானம் வெறும் 10 ஆயிரம் யுவான்களாக மட்டுமே இருந்தபோது, யாங் ஹாங்சாங்-கின் ஆண்டு வருமானம் சுமார் ஒன்றரை லட்சம் யுவான்களாக இருந்தது. இதை வைத்தே இவரது வளர்ச்சியையும், பாம்பு பண்ணை தொழிலில் கிடைத்த லாபத்தையும் யூகித்து கொள்ள முடியும்.

மருத்துவ தேவைகளும் பெருகப்பெருக சிவப்பு கட்டுவிரியன், கருநாகம் உள்ளிட்ட பாம்பு விஷத்துக்கான மருந்து நிறுவனங்களின் தேவைகளும் பெருகின. விளைவு? ஒரு கிராம் பாம்பு விஷம் சுமார் 5 ஆயிரம் யுவான்கள் வரை விலைபோவதால் அன்று வறட்சியால் நொடிந்துக் கிடந்த சிசிகியாவ் கிராமம் இன்று செல்வந்தர்களின் பூமியாக மிளிர்கிறது.

ஆண், பெண், குழந்தைகள் என ஒட்டுமொத்த கிராம மக்களும் இதே தொழிலில் ஊறிப்போய் கிடக்கின்றனர். கூடவே உடல் முழுவதும் பாம்புகளின் பாசத்தீண்டல்களின் அடையாளமாக கடிபட்ட காயங்களும் அனைவரிடமும் காணப்படுகிறது.

காலப்போக்கில் மீன் பண்ணை, பட்டு நெசவு என்று வேறு தொழில் தேடி சில இளையதலைமுறையினர் வெளியூர்களுக்கு சென்று விட்டாலும் ஆண்டுக்கு சுமார் 2 டன் எடைக்கு பாம்பு விற்றால் போதும் 4 லட்சம் யுவான்கள் வரை பணம் சம்பாதிக்க முடியும் என்பதால் இங்குள்ள சுமார் 600 மக்கள் சுமார் 30 லட்சம் பாம்புகளுடன் இரவும், பகலும் வாழ்ந்து வருகின்றனர்.

இங்குள்ள பண்ணைகளில் சேகரிக்கப்படும் கொடிய பாம்புகளின் விஷம் உறைய வைக்கப்பட்டு, பொடியாக்கி தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், பாம்புகளின் கல்லீரல் மற்றும் பித்தப்பை போன்றவை சில கொடிய நோய்களை தீர்க்கும் அருமருந்தாக பயன்படுகிறது. பாம்புத்தோலுக்கும் சர்வதேச சந்தையில் நல்ல விலை கிடைக்கின்றது.

பாம்புகளை போட்டு ஊற வைத்த ஒயின் மற்றும் பாம்புக்கறி உணவுக்கும் சீன மக்களிடையே கடும் கிராக்கியும் தேவையும் இருப்பதால் பல உணவகங்களில் ‘மெயின் டிஷ்’ ஆகவும் பாம்புக்கறி சக்கைப்போடு போடுகிறது.

இதனால், வேறு எந்த தொழில் செய்வதையும்விட பாம்புப் பண்ணை தொழில்தான் சிறப்பானது – லாபகரமானதும்கூட. எனவே, இந்த தொழிலை ஒருநாளும் கைவிடப் போவதில்லை என்று இந்த கிராமத்து மக்கள் உறுதியுடன் கூறுகின்றனர்.

-athirvu.in