சென்ற ஆண்டு உயிரிழந்த சீனாவை சேர்ந்த மனித உரிமை ஆர்வலரும், அமைதிக்கான நோபல் பரிசை வென்றவருமான லியூ ஜியாபோவின் மனைவி, எட்டு ஆண்டுகால அதிகாரபூர்வ வீட்டுக்காவலுக்கு பிறகு சீனாவை விட்டு வெளியேறியுள்ளார்.
லியூ ஜியா செவ்வாய்க்கிழமையன்று சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து ஜெர்மனிக்கு செல்லும் விமானத்தில் சென்றதை சீன அரசாங்கம் உறுதிசெய்துள்ளது.
தனது கணவர் கடந்த 2010ஆம் ஆண்டு நோபல் பரிசை வென்றதிலிருந்து இவர் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
- சீனா – அமெரிக்கா பொருளாதார சண்டை எப்படி நம்மை பாதிக்கும்?
- 40 ஆண்டுகளில் உலகின் மிக சக்திவாய்ந்த நாடாக சீனா உருவானது எப்படி?
பல்கலைக்கழக பேராசிரியாக இருந்து, மனித உரிமை பிரசாரகாரராக மாறிய லியூ ஜியாபோ,, உபதேசத்தை தூண்டியதற்காக கடந்த 2009ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த லியூ கடந்த ஆண்டு உயிரிழந்தார்.
பல ஆண்டுகளுக்கு அதிகப்படியான கண்காணிப்பின்கீழ் இருந்த கவிஞரான லியூ ஜியா, மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இவர் மீது இதுவரை எந்த குற்றச்சாட்டும் பதிவுசெய்யப்படாத நிலையில், தொடர்ச்சியான வீட்டுக்காவலுக்கு எதிரான தனது போராட்டத்தில் உயிரிழப்பதற்கு தயாராக இருப்பதாக கடந்த மே மாதம் அறிவித்திருந்தார்.
“தனது சுய விருப்பத்தின் அடிப்படையில், மருத்துவ சிகிச்சைக்காக” அவர் ஜெர்மனிக்கு சென்றுள்ளதாகவும், இதற்கும் சீன பிரதமரின் இந்த வார ஜெர்மனி சுற்றுப்பயணத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். -BBC_Tamil