அன்வார்: பக்காத்தானின் செராமாக்களை முடக்குவதே மசோதாவின் நோக்கம்

அமைதிப் பேரணி சட்டமுன்வரைவு கொண்டுவரப்பட்டதே, பக்காத்தான் ரக்யாட் செராமாக்களின்வழி மக்களுக்கு விவகாரங்களை விளக்குவதைத் தடுப்பதற்காகத்தான் என்று சாடுகிறார் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்.

செராமா அல்லது கலந்துரையாடல் போன்ற கூட்டங்களை நடத்த 30-நாள்களுக்கு முன்கூட்டியே அதிகாரப்பூர்வமாக அனுமதி பெற வேண்டியிருப்பதாக அவர் கூறினார்.

“பக்காத்தான் ரக்யாட் எம்பிகள், கூட்டங்கள் நடத்தி அரசாங்கத்தில் நடக்கும் அதிகார அத்துமீறல்கள், ஊழல்கள், தவறான நிர்வாகம் பற்றி மக்களுக்குத் தெரியப்படுத்துவதைத் தடுக்கவே அது கொண்டுவரப்பட்டுள்ளது”, என்றாரவர். மக்களைச் சென்றடைய செராமாக்கள் பெரிதும் உதவுவதாக அவர் கருதுகிறார்.

அமைதிப்பேரணி சட்டமுன்வரைவு ரிம20,000வரை அபராதம் விதிக்கவும் வகை செய்வதைச் சுட்டுக்காண்பித்த அன்வார், அனுமதியின்றி செராமாக்களுக்கு அல்லது கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிந்தால் பக்காத்தான் எம்பிகளை நீதிமன்றங்களுக்கு இழுத்துச்செல்வார்கள் என்றார்.

செவ்வாய்க்கிழமை, முதல் வாசிப்புக்கு வந்த அச்சட்டமுன்வரைவு இன்று இரண்டாம் வாசிப்புக்கு வருகிறது. இதனிடையே, பல தரப்பினர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

நேற்று, சிவில் அமைப்புகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கூட்டமொன்றை  நாடாளுமன்றத்துக்கு வெளியில் நடத்தின.

மலேசிய வழக்குரைஞர் மன்றம், தெரு ஆர்ப்பாட்டங்களுக்கு இடமளிக்க வேண்டும் என்று கோரி கடுமையான அறிக்கை ஒன்றைச் செவ்வாய்க்கிழமை விடுத்திருந்தது. சில தரப்பினர் பழைய சட்டத்தைவிட இப்புதிய சட்டம் கூடுதல் அடக்குமுறைகளைக் கொண்டிருப்பதாகக் குறைகூறியுள்ளன.

அவசரகாலத்தின்  முடிவுக்கு வரவேற்பு

அன்வார், மூன்று அவசரகாலப் பிரகடனங்கள் அகற்றப்பட்டிருப்பதை வரவேற்றார். அதை நீண்டகாலத்துக்குமுன்பே செய்திருக்க வேண்டும் என்றாரவர்.

“அவசரக்காலச் சட்டங்கள் அகற்றப்பட வேண்டும் என்ற பக்காத்தானின் பரிந்துரையைப் பிரதமர் ஏற்றுக்கொண்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது. அதன் தொடர்பில் 2011 ஏப்ரலில் நாங்கள் முன்வைத்த தீர்மானம் மக்களைத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது.” 

இவ்விவகாரத்தில் நஜிப்பின் நிலைப்பாடு பிரதமர்துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீசின் நிலைப்பாட்டிலிருந்து வேறுபடுவதையும் அன்வார் சுட்டிக்காட்டினார். லெம்பா பந்தாய் எம்பி நூருல் இஸ்ஸா அன்வாரின் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த நஸ்ரி 1969-இல் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் பொதுப்பாதுகாப்பு தொடர்பானவை என்பதால் அவற்றைத் தொடர்ந்து வைத்திருப்பது அவசியம் என்று அரசு கருதுவதாகக் கூறியிருந்தார்.

என்றாலும், அச்சட்டங்கள் அகற்றப்பட்டது கூடுதல் ஜனநாயகத்துக்கு வழிவகுக்கும் என்பதால் பக்காத்தான் அதனை வரவேற்கிறது என்று அன்வார் கூறினார்.