அணுவாயுதங்களை பூரணமாகப் பகிஷ்கரிக்க வடகொரியாவுக்கு காலக்கெடு விதிக்கப் படவில்லை! : டிரம்ப்

சமீபத்தில் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டியளிக்கும் போது வடகொரியா தன்னிடம் உள்ள அணுவாயுதங்களைப் பூரணமாகப் பகிஷ்கரிக்க காலக் கெடு ஒன்றும் விதிக்கப் படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு இறுதி வரை தென்கொரியாவுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேசங்களுக்கும் அச்சுறுத்தலாக அணுவாயுத அல்லது ஏவுகணைப் பரிசோதனைகளை வடகொரியா நிகழ்த்தி வந்தது.

ஆனால் யாரும் சற்றும் எதிர்பாராத விதத்தில் முதலில் தென்கொரியாவில் இடம்பெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வடகொரியா பங்கேற்றது. அதற்குப் பின் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் ஐ வடகொரிய அதிபர் கிம் உத்தியோகபூர்வமாக சந்தித்தார். இதன் போது அணுவாயுத உற்பத்தியை நிறுத்திக் கொள்வதாக வடகொரியா வாக்களித்தது. இந்த மாற்றங்களின் பலனாக ஜுன் 12 ஆம் திகதி சிங்கப்பூரில் வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் உம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் வரலாற்று பூர்வமான சந்திப்பை மேற்கொண்டனர்.

இதன்போது கொரியத் தீபகற்பத்தில் பூரண அணுவாயுதப் பகிஷ்கரிப்புக்கு வடகொரியா வாக்களித்ததுடன் இதை செய்து முடித்த பின் அதன் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்வது என அமெரிக்காவும் வடகொரியாவும் உடன்பட்டன. ஆனால் இதற்கும் பின் கூட வடகொரியா வாக்குறுதியை மறந்து இரகசியமாக அணுச் செறிவூட்டலை மேற்கொண்டதாக அண்மையில் செய்மதி புகைப் படங்களை ஆதாரமாகக் கொண்டு அமெரிக்கா தனது எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் வடகொரியா தன் அணுவாயுதம் அத்தனையையும் அழிக்க காலக் கெடு எதுவும் நிர்ணயிக்கப் படவில்லை என்று தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

ஆயினும் இவ்விரு தலைவர்களும் சந்தித்த போது மேற்கொள்ளப் பட்ட தீர்மானங்களில் ஒன்றின் படி கொரியத் தீபகற்பத்தில் நிரந்தர அமைதி திரும்ப வேண்டுமானால் வடகொரியாவும் அமெரிக்காவும் தாங்கள் பேசிக் கொண்ட விடயங்களை உடனே செயற்படுத்த வேண்டும் என தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-4tamilmedia.com