ஐக்கிய அமீரகத்தின் 7 மாகாணங்களில் ஒன்றான புஜைரா பகுதியின் பட்டத்து இளவரசராக இருப்பவர் 31 வயதான ஷேக் ரஷீத் பின் ஹமீத் அல் ஷர்க்கி. இவரே தம்மை பணம் கேட்டு மிரட்டுவதாகவும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறி கத்தார் நாட்டுக்கு வெளியேறியவர்.ஆனால் இவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரத்தையும் இதுவரை வெளியிட மறுத்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும், ஏமன் விவகாரம் தொடர்பில் ஐக்கிய அமீரகத்தின் 7 ஆட்சியாளர்களுக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாகவும், ஏமன் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ராணுவத்தினர் தொடர்பில் ஆட்சியாளர்கள் வெளியிடும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானது எனவும், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட ஐக்கிய அமீரக ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஆனால் அந்த எண்ணிக்கையை அமீரக ஆட்சியாளர்கள் பொதுமக்களிடம் தெரிவிக்காமல் மறைப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மட்டுமின்றி ஏமன் போரில் கொல்லப்பட்டுள்ள பெரும்பாலான ராணுவ வீரர்கள் ஃபுஜைரா பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இதனிடையே ஷேக் ரஷீத்தின் குற்றச்சாட்டுகளை புறந்தள்ளியுள்ள ஐக்கிய அமீரகம் இது சூழ்ச்சி எனவும், துணிவில்லாதவர்கள் பேச்சை கருத்தில் கொள்ள தேவை இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி கடந்த 2017 ஜூன் மாதம் முதல் கட்டார் மீதான அனைத்து தொடர்புகளையும் சவுதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட நாடுகள் துண்டித்துள்ளன. இந்த நிலையில் கத்தார் நாட்டிடம் அடைக்கலம் கோரியுள்ள ஷேக் ரஷீத் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள், ஐக்கிய அமீரகத்தின் 47 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் முதன்முறை என கூறப்படுகிறது.
-dailythanthi.com