லண்டன்: மனித குல வரலாற்றில் புதிய காலம் (Age) ஒன்றை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். அதாவது கற்காலம், இரும்புக்காலம் ஆகியவற்றின் வரிசையில் புதிய காலம் ஒன்றை விஞ்ஞானி்கள் கண்டுபிடித்துள்ளனர். புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த காலகட்டத்தின்போது மிகப் பெரிய வறட்சியை பூமி சந்தித்ததாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இந்த காலத்திற்கு இந்தியாவின் ஒரு மாநிலமான மேகலாயாவின் பெயரை சூட்டி மேகாலயன் காலம் (Meghalayan Age) என்று இதற்கு விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர். இதற்கான ஆதாரங்கள் மேகலாயவில் கிடைத்ததால் மேகலாயாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த புதிய காலத்தின் வயது இன்று முதல் பின்னோக்கி 4200 ஆண்டுகள் ஆகும். இந்த காலகட்டத்தின்போது பூமி மிகப் பெரிய மாற்றங்களைச் சந்தித்ததாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
நாகரீகங்கள்
இந்த புதிய மேகாலயன் காலத்தின் தொடக்கத்தின்போதுதான் பல உலக நாகரீகங்கள் அழிந்தனவாம். அதாவது இந்த காலகட்டத்தில் பூமி முழுவதும் மிகப் பெரிய வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி பல நாகரீகங்கள் அழிவைக் கண்டனவாம்.
ஹோலோசீன் சகாப்தம்
தற்போது நாம் இருந்து வரும் காலகட்டத்தை (Holocene Epoch) ஹோலோசீன் சகாப்தம் என்று கூறுவோம். அதாவது கிட்டத்தட்ட தற்போது உள்ள அனைத்து உயிரின, பூகோள மாறுபாடுகளும் 11,700 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டவையாகும்.
ஹோலோசீனில் பிரிவினை
தற்போது ஹோலோசீன் சகாப்தத்தையும் பிரித்துள்ளனர் விஞ்ஞானிகள். அதில் ஒன்றுதான் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேகாலயன் காலமாகும். இதற்கான அறிவிப்பை சர்வதேச புவித்தட்டியல் கழகம் அறிவித்துள்ளது. இதுதான் பூமியின் பல்வேறு மாறுபாடுகளை அறிவிக்கும் அதிகாரப்பூர்வ அமைப்பாகும்.
மோசமான மேகாலயன் காலம்
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய மேகாலயன் காலகட்டமானது 4200 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து 1950ம் ஆண்டு வரையிலான காலகட்டமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் உலகம் முழுவதும் பல பயங்கர வறட்சிகள் ஏற்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் இந்த வறட்சி நீடித்துள்ளது.
சிந்து சமவெளி
இந்த காலகட்டத்தின்போதுதான் எகிப்து, கிரீஸ், சிரியா, பாலஸ்தீனம், மெசபடோமியா, சிந்து சமவெளி, யாங்ஸே ஆற்று பள்ளத்தாக்கு நாகரீகங்கள் அழிந்துள்ளன என்று பிபிசி செய்தி தெரிவிக்கிறது.