தென்-மேற்கு சிரியாவின் போர் நிகழும் பகுதியிலிருந்து சிரியாவின் ‘வைட் ஹெல்மெட்ஸ்’ எனப்படும் பொதுமக்கள் பாதுகாப்பு குழுவை சேர்ந்தவர்களை மீட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
வைட் ஹெல்மெட்ஸ் குழுவை சேர்ந்த சுமார் 422 பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை இஸ்ரேல் ஆக்கிரமிப்பின் கீழுள்ள கோலன் ஹைட்ஸ் வழியாக ஜோர்டானுக்கு இரவு முழுவதும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த பணியாளர்களை மீட்பதற்கு உதவுமாறு இஸ்ரேலுக்கு கோரிக்கை விடுத்த நாடுகளில் ஒன்றான பிரிட்டன், இந்த நடவடிக்கையை பாராட்டியதுடன், மீள்குடியேற்றத்துக்கு உதவுவதாக கூறியுள்ளது.
- சிரியா நெருக்கடி: குடையும் கேள்விகளுக்கான பதில்கள்
- சிரியா மீதான தாக்குதலில் இந்தியா மெளனம் காப்பது ஏன்?
சிரியாவின் போர் மூண்டுள்ள பகுதியிலிருந்து பொதுமக்களை காப்பாற்றும் தன்னார்வ பணியாளர்கள் என்று வைட் ஹெல்மெட்ஸ் குழுவினர் தங்களை தாங்களே அழைத்துக்கொள்கின்றனர்.
எப்படி மீட்கப்பட்டார்கள்?
போர் நிகழும் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் அந்நாட்டின் எல்லைப்பகுதி வரை அழைத்துச்செல்லப்பட்டு, இஸ்ரேலிய படைகள் மூலம் கோலன் ஹைட்ஸ் வழியாக ஜோர்டானுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
800 வைட் ஹெல்மெட்ஸ் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை வெளியேற்றுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தாலும், 422 பேரை மட்டுமே மீட்க முடிந்தது.
சிரியாவின் தென்-மேற்கு பகுதிகளில் விரிவடைந்துவரும் ஐ.எஸ் அமைப்பினரால் அப்பகுதியில் எஞ்சியுள்ள பணியாளர்கள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மீட்பு நடவடிக்கை ஒரே ஒரு முறை மட்டுமே மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டது என்பதால் எஞ்சியவர்களின் நிலைகுறித்த அச்சம் நிலவுவதாகவும் பிபிசியின் செய்தியாளர் மார்க் லோவென் கூறுகிறார்.
வெற்றிகரமாக மீட்கப்பட்டவர்களில் 100 பேர் வைட் ஹெல்மெட்ஸ் பணியாளர்கள், எஞ்சியவர்கள் அவர்களது குடும்பத்தினர் என்று தெரிகிறது.
மீட்கப்பட்ட வைட் ஹெல்மெட்ஸ் பணியாளர்கள், அவர்களது குடும்பத்தினர் ஜோர்டானின் “தடைசெய்யப்பட்ட பகுதியில்” தங்கவைக்கப்பட்டு, ஐநாவின் மதிப்பீடு முடிந்தவுடன் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள். -BBC_Tamil