பாலியல் தொழிலில் தள்ளப்படுவதற்காக ஹார்மோன் ஊசி போடப்படும் நேபாள சிறுமிகள்

கடத்தப்படும் சிறுமிகளை உடல் முதிர்ச்சியடைய செய்வதற்காக ஹார்மோன்கள் மற்றும் பிற மருந்துகள் வழங்கப்படும் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலியல் தொழிலுக்கு விரைவில் அனுப்புவதற்காகவே செயற்கை முறையில் உடல் முதிர்ச்சியடைய செய்வது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

எட்டு வயதில் நேபாளத்தில் இருந்து இந்தியாவிற்கு கடத்தி கொண்டு வரப்பட்ட சிறுமி ஒருவருடன் பிபிசி பேசியது. “எனக்கு தினமும் இருமுறை சிவப்பு நிற மருந்து கொடுப்பார்கள். அதை எடுத்துக் கொண்டதும் எனக்கு வாந்தி வரும். அந்த மருந்தை சாப்பிடவே பிடிக்காது. வேண்டாம் என்று மறுப்பேன், அழுவேன். ஆனால், பயங்கரமாக அடிப்பார்கள், கட்டாயப்படுத்தி மருந்து கொடுப்பார்கள். இந்த மருந்தை சாப்பிட்டால் விரைவில் பெரிய பெண்ணாகிவிடுவேன், அப்போதுதான் சீக்கிரமாக வீட்டுக்கு திரும்பி செல்லமுடியும் என்று அவர்கள் சொல்வார்கள்” என அந்த சிறுமி சொன்னார்.

நேபாளத்தின் வடக்கு பகுதியில் வசித்த ஒரு குடும்பத்தின் எட்டு குழந்தைகளில் மூத்த பெண் இந்தச் சிறுமி. பெண்ணுக்கு நல்ல கல்வி கொடுக்கிறோம் என்று கூறி, குடும்பத்திற்கு நம்பிக்கை ஏற்படுத்திய ஒரு பெண்மணியின் பேச்சை நம்பிய பெற்றோர், சிறுமியை தங்கள் மகளை அவருடன் அனுப்பி வைத்தனர்.

ஆனால், காத்மண்டுவில் அதிக நாட்கள் சிறுமி இருக்கவில்லை. அங்கிருந்த மற்றொரு நேபாள குடும்பத்துடன் சிறுமி இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். இந்தியாவில் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தில் வீட்டுவேலை செய்யும் வேலையில் சிறுமி சேர்த்து விடப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சிறுமியை வேறொரு நகரத்திற்கு அனுப்பிவிட்டனர்.

“அங்கும் நான் மற்றொரு நேபாள குடும்பத்துடன் தங்க வைக்கப்பட்டேன். அங்கேதான் எனக்கு அந்த கசப்பான மருந்தை கொடுப்பார்கள். சிறிது நாட்களில் என்னை தவறான இடத்தில் விற்றுவிட்டார்கள். அங்கு இருந்தவர்களிலேயே வயது குறைந்தவள் நான்தான்” என்று அவர் நினைவுகூர்ந்தார்.

child sex abuse , sex trade

“என்னை அவர்களுடன் அனுப்பவேண்டாம் என முதலாளிகளிடம் கெஞ்சினேன். உன்னை வாங்குவதற்காக நாங்கள் செலவழித்த பணத்தை யார் கொடுப்பார்கள் என்று கேட்டு என்னை அடித்தார்கள். ஆனால் என்னுடைய நேரம் நன்றாக இருந்தது. நான் தங்க வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஆறு மாதத்திலேயே காவல் துறையினரின் ஆய்வு நடந்தது; அந்த மோசமான இடத்தில் இருந்து அவர்கள் என்னை அழைத்துச் சென்றார்கள்”

இலக்காகும் ஏழை பெண்கள்

காவல் துறையினரும், ஆள் கடத்தலுக்கு எதிராக செயல்படும் அமைப்பினரும் இந்திய-நேபாள எல்லையில் கண்காணிப்பை அதிகரித்துள்ளனர். பல சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இதனால் பெண்களை கடத்துவதற்கு பதிலாக சிறுமிகளை கடத்துகிறார்கள் என்று சொல்கிறார் கடத்தலுக்கு எதிராக போராடும் அரசு அமைப்பான ‘ மைதி நேபாள்’-இன் இயக்குநர் பிஷ்வரம் கட்கா.

“இளம் பெண்களை கடத்தினால் கடத்தலை சுலபமாக கண்டுபிடித்துவிடமுடியும். ஆனால் குடும்பத்துடன் வரும் சிறுமிகள் என்றால் சந்தேகம் வராது என்பதால் சிறுமிகளை கடத்துவது அதிகரித்துவிட்டது. எனவே பெண் குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்கிறோம், படிக்க வைக்கிறோம் என்று ஏழை பெற்றோர்களிடம் சொல்லி அழைத்து வந்து, சிறுமிகளை சுலபமாக கடத்துகின்றனர். எல்லைப் பகுதியை கடக்கும்போது விசாரிக்கப்பட்டால், தங்கள் குழந்தை என்று சொல்லி தப்பித்துக் கொள்வார்கள்” என்கிறார் கட்கா.

கடத்தல்காரர்கள் ஏழை குடும்பத்து சிறுமிகள் மற்றும் பின்தங்கிய மற்றும் வளர்ச்சியடையாத பகுதிகளில் இருக்கும் பெண் குழந்தைகளை இலக்கு வைக்கின்றனர். குழந்தையை நன்றாக வளர்ப்போம், படிக்க வைக்கிறோம் என்ற ஆசை வார்த்தைகளுக்கு ஏழைப் பெற்றோரின் பெண் குழந்தைகள் பலியாகின்றனர் என்று சொல்கிறார் கட்கா.

உடல் வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்காக ஹார்மோன்கள் கொடுக்கப்பட்ட சிறுமிகளை தான் சந்தித்திருப்பதாக, கடத்தப்படும் பெண்களின் நலனுக்காக பணிபுரியும் ‘சக்தி சமுஹ்’ என்ற அமைப்பின் அமைப்பாளர் மற்றும் இயக்குநர் சுனிதா தானுவார் கூறுகிறார்.

child sex abuse , sex trade

“நாங்கள் வசித்த இடத்தில் இருந்த ஒன்பது வயது சிறுமி ஒருவரை அழைத்துச் சென்றார்கள் இரண்டு மாதத்திற்கு பிறகு அந்த சிறுமி அழைத்து வரப்பட்டபோது, அந்தச் சிறுமி அசாதரணமான முறையில் வளர்ச்சியடைந்திருந்தாள்; இரண்டு மாதங்களில் அந்த அளவு வளர்ச்சி ஏற்பட சாத்தியமே இல்லை. ஆனால் குரல் மட்டும் மாறவில்லை” என்கிறார் சுனிதா தானுவார்.

பொதுவாக, 9 முதல் 12 வயது சிறுமிகளுக்கு ஹார்மோன் மருந்துகள் கொடுப்பார்கள். மருத்துவர்களின் கருத்துப்படி, ஹார்மோன் மருந்துகள் கொடுக்கப்படும் சிறுமிகளின் மார்புகளும், பிட்டங்களும் பெரிதாகி, இளம் பெண்ணாக தோற்றமளிப்பார்கள் என்று சொல்கிறார் சுனிதா தானுவார்.

மருத்துவர் அருணா உப்ரேதியிடம் இது பற்றி பேசினோம். “ஹார்மோன் மருந்துகளை சிறுமிகளுக்கு செலுத்தி, இளம் பெண்களாக மாற்றிவிடலாம். ஆனால் இதன் பக்கவிளைவுகள் மிகவும் கொடுமையானது. அவர்கள் வாழ்நாள் முழுவதும் பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். ஆரோக்கியம் மிகவும் பாதிக்கப்படும். அவர்களின் எலும்புகளும், கர்ப்பப்பையும் பாதிக்கப்படும்”.

உடல் வளர்ச்சிக்காக கொடுக்கப்படும் ஹார்மோன்களின் பக்கவிளைவுகள்

“சில ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியாவில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பங்கேற்பதற்காக சென்றிருந்தேன். அங்கு மிகப்பெரிய மார்பகங்களுடன் இருந்த ஒரு பெண்ணை சந்தித்தேன். அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, சிறுமியாக இருக்கும்போதே கடத்தப்பட்ட அவருக்கு ஹார்மோன்கள் கொடுக்கப்பட்டு, பாலியல் தொழிலில் தள்ளிவிட்டார்கள். அதற்காக ஹார்மோன்கள் கொடுக்கப்பட்டு இளம் பெண்ணாக மாற்றினார்கள் என்று அந்த பெண்ணிடம் பேசியபோது தெரிந்துக்கொண்டேன்” என்கிறார் உப்ரேதி.

child sex abuse , sex trade
இப்படிப்பட்ட பெண்கள் இளமையாக இருக்குவரை அல்லது விபச்சாரத்தில் மவுசு இருக்கும்வரை அந்தத் தொழிலிலேயே இருக்க கட்டாயப்படுத்தப்படுவார்கள்.

நேபாள போலீஸாரின் புள்ளிவிபரங்களின்படி, மனித கடத்தல் தற்போது அதிகரித்துள்ளது. 181ஆக இருந்த கடத்தல் புகார்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் 268ஆக உயர்ந்துவிட்டது. புகார் கொடுத்தவர்களில் 80 சதவிகிதம் பெண்கள்.

“வளைகுடா நாடுகளிலும், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற வளமான நாடுகளின் குடியுரிமை பெற்றுத் தருவதாக ஆசை காட்டி பெண்களை சிக்க வைக்கிறார்கள். இது பெண்களை கடத்துவதற்கான ஒரு வழிமுறை” என்று நேபாள போலீசின் செய்தித்தொடர்பாளர் ஷைலேஷ் தாபா சேத்ரி கூறுகிறார்.

ஆனால் குழந்தைகள் கடத்தப்பட்டதாக நேபாள போலீசாருக்கு புகார்கள் வருவதில்லை என்று அவர் கூறுகிறார்.

child sex abuse , sex trade

“சிறுமிகளை கடத்தியதாகவோ, உடல் உறுப்புகள் துரிதமாக வளர்வதற்காக அவர்களுக்கு ஹார்மோன் மருந்துகள் கொடுக்கபப்ட்டதாகவோ எங்களுக்கு புகார்கள் எதுவும் வரவில்லை” என்று சேத்ரி தெரிவித்தார்.

அண்மை ஆண்டுகளில் கடத்தலின் வழிமுறைகள் மாறிவிட்டன. அரசும் கடத்தலை தடுப்பதற்கான முயற்சிகளை பல்வேறு கோணங்களில் சிந்தித்து மேற்கொண்டு வருகிறது.

விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி, மனித கடத்தலின் புதிய முறைகளையும் உத்திகளையும் தெரியவைக்கவேண்டும் என்று மனித கடத்தலை தடுக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

புதிய சட்டங்களையும், கொள்கைகளையும் இயற்றுவதன் மூலம் மட்டும் கடத்தலை தடுக்க முடியாது. பயனுள்ள விழிப்புணர்வு திட்டங்கள் தேவை. விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடத்தப்பட வேண்டும் என்பது செயற்பாட்டாளர்களின் கோரிக்கை. -BBC_Tamil