ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப்போர் முடிவுக்கு கொண்டு வர தலீபான் அமைப்பின் முன்னாள் தலைவர்களும், அமெரிக்க அதிகாரிகளும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக ஊடக தகவல்கள் கூறுகின்றன.
ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து 18-வது ஆண்டாக அரசு படைகளுக்கும், தலீபான் பயங்கரவாத அமைப்பினருக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.
இந்த உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வர தலீபான்களை நேரடி பேச்சு நடத்த வருமாறு ஆப்கானிஸ்தான் அதிபர் அஷரப் கனி அழைப்பு விடுத்தார். ஆனால் அமெரிக்காவுடன் மட்டுமே நேரடி பேச்சு நடத்த விரும்புவதால், ஆப்கானிஸ்தான் அதிபர் அழைப்புக்கு அவர்கள் செவி சாய்க்கவில்லை.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்கா தீவிரமாக உள்ளது. அந்த வகையில் கத்தாரிலும், ஆப்கானிஸ்தானிலும், ஐக்கிய அரபு அமீரகத்திலும் தலீபான் அமைப்பின் முன்னாள் தலைவர்களும், அமெரிக்க அதிகாரிகளும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக ஊடக தகவல்கள் கூறுகின்றன.
கத்தார் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற ஒருவர் இதுபற்றி குறிப்பிடுகையில், “கத்தார் நாட்டின் தோஹா நகரில் உள்ள ஓட்டலில் பேச்சுவார்த்தை இணக்கமான முறையில் நடந்தது. இந்த பேச்சுவார்த்தை ஓட்டலுக்குள்ளும், வெளியேயும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடந்தது. ஓட்டல் பணியாளர்கள் கூட உள்ளே அனுமதிக்கப்படவில்லை” என கூறினார்.
இதே போன்று இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானின் காபூல் நகரிலும், ஐக்கிய அரபு அமீரகத்திலும் தலீபான்கள், அமெரிக்க அதிகாரிகள் சந்தித்து பேச்சு நடத்தியதாக தலீபான் தளபதி ஒருவர் கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, “எங்கள் நிலைப்பாடு தெளிவானது. ஏற்கனவே கூறியதைப்போன்று ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படை திரும்பப்பெறப்பட வேண்டும். ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க அனுமதிக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
-athirvu.in