சோமாலியாவில் ராணுவ தளத்தில் பயங்கரவாத தாக்குதல்; 27 வீரர்கள் கொன்று குவிப்பு

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல்-கொய்தாவின் இணை இயக்கமான அல்-ஷபாப் பயங்கரவாத இயக்கம் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இவர்கள் போலீசார், ராணுவ வீரர்கள் மற்றும் சோமாலியாவுக்கு வரும் அயல்நாட்டினரை குறிவைத்து தொடர் பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். இவர்களின் கொட்டத்தை ஒடுக்க சோமாலியா ராணுவம் கடுமையாக போராடி வருகிறது.

இந்த நிலையில் லோவர் ஜூபா மாகாணத்தின் கடற்கரை நகரமான கிஸ்மாயோவில் இருந்து 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ராணுவ தளத்தின் மீது பயங்கர தாக்குதல் நடத்தி ராணுவ வீரர்களை கொன்று குவித்ததாக அல்-ஷபாப் பயங்கரவாத இயக்கம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளரான அப்டிஅசிஸ் அபு முசாப், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எங்கள் இயக்கத்தை சேர்ந்த போராளிகள் முதலில் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை வெடிக்க செய்து ராணுவ தளத்தின் நுழைவுவாயிலை தகர்த்தனர். அதன் பின்னர் உள்ளே நுழைந்து துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் அதிபயங்கர தாக்குதலை நடத்தினார்கள். இதில் 27 ராணுவ வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். மற்ற ராணுவ வீரர்கள் அனைவரும் காட்டு பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதே சமயம் இந்த தாக்குதல் குறித்து அரசு தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

-dailythanthi.com