தென் கிழக்கு லாவோஸில் உள்ள ஓர் அணை உடைந்ததில் நூற்றுக்கணக்கான மக்களை காணவில்லை என்கிறது அந்நாட்டு ஊடகம்.
தென் கிழக்கு லவோஸில் உள்ள அட்டபியு மாகாணத்தில் நீர்மின் அணை ஒன்று உள்நாட்டு நேரப்படி திங்கட்கிழமை மாலை உடைந்து விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக அணை அருகே உள்ள ஆறு கிராமங்கள் நீரில் மூழ்கின என்று விவரிக்கிறது லாவோ செய்தி குழுமம்.
இதன் காரணமாக 6000-க்கும் மேற்பட்டோர் வீடு இழந்துள்ளனர்.
அந்தப் பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வீடுகளை மோசமாக வெள்ளம் சூழ்ந்து இருப்பதை காட்டுகின்றன.
அணை உடைந்து வெள்ளம் ஏற்பட்டதில் பல பேர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
அணை உடைந்ததற்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை.
2013 ஆம் ஆண்டு இந்த அணை கட்டும் பணி தொடங்கியது. இவ்வாண்டு அந்த அணையிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது.
புதிதாக கட்டப்பட்டு வரும் இந்த அணையின் நீர்மின் திட்டத்தால் அங்குள்ள மக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சாத்தியமான தாக்கங்கள் குறித்து சுற்றுச்சூழல் குழுக்கள் ஏற்கனவே அச்சத்தை வெளிப்படுத்தியிருந்தன.
தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக “பெருக்கெடுத்த நீர்” அணையை நோக்கி பாய்ந்ததை தாங்காமல், அணை உடைந்துவிட்டதாக இதன் கட்டுமான நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய இந்த கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள தென் கொரிய நிறுவனம் ஒன்றின் செய்தித்தொடர்பாளர், பெரிய அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், சிறிய விநியோக அணையே உடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
“அணை உடைந்ததற்கான காரணம் குறித்து இன்னும் எங்களுக்கு தெரியவில்லை. ஆனால், அணையின் மேற்பகுதி கட்டுமானம் உடைந்ததால், தண்ணீர் உள்ளே புகுந்து விநியோக அணையிலிருந்து நீர் கரைபுரண்டு ஓடியதாக நினைக்கிறோம்” என்று அவர் மேலும் கூறினார்.
கடந்த சில நாட்களாக லாவோஸில் கனமழை பெய்து வருகிறது
அந்நாட்டின் பிரதமர் தொங்லவுன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு, நிவாரண முயற்சிகள் குறித்து விவாதித்தார். -BBC_Tamil