காட்டுக்கு பட்டா போட்ட வைர கம்பெனி; நாடு கடத்தப்படும் யானைகள்

தென்னாப்பிரிக்காவில் தங்களுக்கு சொந்தமான இயற்கைக் காப்பகத்தில் இருந்து 200 யானைகளை, அண்டை நாடான மொசாம்பிக்கில் உள்ள பூங்கா ஒன்றிற்கு இடம்மாற்றும் நடவடிக்கையை தொடங்கிவிட்டதாக வைர சுரங்கத் தொழில் நிறுவனமான டீ பீர்ஸ் (De Beers) தெரிவித்துள்ளது.

யானைகள் அதிகமாக இருக்கும் வெனிஷியா லிம்போபோ காப்புக்காடுகளில் இருந்து, மொசாப்பிக்கின் ஜினாவே தேசிய பூங்காவிற்கு, பீஸ் பார்க்ஸ் ஃபவுண்டேசன் அமைப்பின் உதவியுடன் இந்த யானைகள் கொண்டு செல்லப்படுகின்றன.

சுமார் 1500 கிலோமீட்டர் தொலைவுக்கு யானைகளை நாடு கடந்து கொண்டுச் செல்வது மிகவும் கடினமான பணியாகும்.

மொசாம்பிக் நாட்டில் 1992ஆம் ஆண்டு வரை நடைபெற்ற உள்நாட்டு போரில் யானைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

யானைகள்

உள்நாட்டுப் போரில் யானைகள் அழிக்கப்பட்டதோடு, யானைகள் வேட்டையாடப்படுவதாலும், அங்கு சமீபத்திய ஆண்டுகளில் அந்த நாட்டில் யானைகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

முதல்கட்டமாக 60 யானைகளை அனுப்பும் பணியை தொடங்கியிருப்பதாக டி பீயர்ஸ் கூறுகிறது. மயக்கமூட்டப்பட்ட விலங்குகள், லாரிகளில் ஏற்றப்பட்டு எல்லை கடந்து கொண்டு செல்லப்படுகின்றன.

யானைகள்

சீனாவில் அதிகரித்து வரும் யானை தந்தங்களின் தேவைக்காக 2010 ஆம் ஆண்டு முதல் மொசாம்பிக் நாட்டில் யானைகள் அதிக அளவில் வேட்டையாடப்படுவதும், யானைகளின் எண்ணிக்கை பாதியளவிற்கு குறைந்துவிட்டதற்குக் காரணம் என அஞ்சப்படுகிறது.

பிரிட்டனைச் சேர்ந்த செசில் ரோட்ஸ் என்பவரால் டே பியர்ஸ் நிறுவப்பட்டது, சமீப காலம் வரை சர்வதேச அளவில் வைர வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் மிகப்பெரிய நிறுவனமாக இது திகழ்ந்தது. -BBC_Tamil