தனது நாட்டின் வட மேற்கு பகுதியில் உள்ள முக்கிய ராக்கெட் ஏவுதளத்தின் ஒரு பகுதியை அகற்றும் பணியை வட கொரியா தொடங்கியுள்ளதாக தெரிய வருகிறது.
அமெரிக்காவை மையமாக கொண்டுள்ள ஒரு குழுவால் பார்வையிடப்பட்ட சோஹே ராக்கெட் ஏவுதளத்தின் செயற்கைகோள் படங்கள் கடந்த ஜூன் மாதம் நடந்த டிரம்ப்-கிம் சந்திப்பின்போது வட கொரியா அளித்த ஒரு வாக்குறுதியை நிறைவேற்றும் ரீதியில் உள்ளதாக கூறப்படுகிறது.
தான் ஒரு இயந்திர சோதனை களத்தை அழித்துவிடப் போவதாக வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன், தன்னிடம் தெரிவித்ததாக இரு தலைவர்களுக்கும் இடையே நடந்த உச்சி மாநாட்டின் முடிவில் அதிபர் டிரம்ப் கூறினார். ஆனால், அது எந்த இடம் என்று அப்போது குறிப்பிடவில்லை.
சோஹே ஒரு ஏவுகணை தளம் என்று முன்பே வட கொரியா தெரிவித்திருந்தது.
ஆனால், இந்த ஏவுகணை தளத்தை பாலிஸ்டிக் ஏவுகணைகளை விண்ணில் ஏவுவதற்கு வட கொரியா பயன்படுத்துவதாக அமெரிக்க அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர்.
கடந்த மாதம் சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இடையே நடைபெற்ற வரலாற்று புகழ்மிக்க உச்சிமாநாட்டின்போது, கொரிய பிராந்தியத்தை முழுமையான அணுஆயுதமற்ற பகுதியாக மாற்ற தேவையான நடவடிக்கைகளை நோக்கி செல்ல இரு தலைவர்களும் உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்த உடன்படிக்கையில் போதுமான தகவல்கள் இல்லை என்றும், வட கொரியா தனது அணுஆயுதங்களை எவ்வாறு அகற்றும் என்பது பற்றியும் குறிப்பிடப்படவில்லை என்று விமர்சிக்கப்பட்டது.
முன்னதாக, வட கொரியா 6 அணுஆயுத சோதனைகளை நடத்தியிருந்தது. அவற்றில் மிக அண்மைய சோதனை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடத்தப்பட்டது. -BBC_Tamil