நிதி பற்றாக்குறையில் தவிக்கும் ஐ.நா சபை..

நியூயார்க்: உள்நாட்டுப்போர் மற்றும் கலவரங்களால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளிலும், தீவிரவாதத்தால் நிலைகுலைந்துப் போய் கிடக்கும் நாடுகளிலும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை வீரர்கள் முகாமிட்டு கடமையாற்றி வருகின்றனர்.

இந்தப் படையில் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 193 நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்களும், காவல்துறை அதிகாரிகளும் இடம்பெறுகின்றனர். இந்தியாவின் சார்பில் மட்டும் 10 நாடுகளில் 7 ஆயிரத்து 798 அமைதிப்படையினர் இதுபோன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதவிர வறுமையால் வாடும் சோமாலியா போன்ற நாடுகளில் வாழும் மக்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்குவது, உள்நாட்டு போர் மற்றும் பொருளாதார வீழ்ச்சி போன்ற காரணங்களால், பிற நாடுகளுக்கு அகதிகளாக செல்பவர்களுக்கு முகாம்கள் அமைத்து தருவது போன்றவற்றை ஐ.நா செய்து வருகிறது.

ஐ.நாவின் செயல்பாடுகளுக்கு அந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் 193 நாடுகளும் இணைந்து நிதி வழங்கி வருகின்றன. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான நிதி சரிவர வழங்கப்படாததால், நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த அளவு நிதி பற்றாக்குறை நடப்பு ஆண்டில் முன்னர் சந்தித்ததே இல்லை எனவும் ஐ.நா தலைவர் அண்டோனியோ குட்ரஸ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், இம்மாதம் 26-ம் தேதி நிலவரப்படி, இந்தியா உள்பட 112 நாடுகள் தங்கள் நிதியை வழங்கிவிட்டதாகவும், அமெரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பிரேசில், எகிப்த், இஸ்ரேல், மாலத்தீவுகள், செய்ச்செலெஸ், சவுதி அரேபியா, சிரியா, சூடான் மற்றும் ஜிம்பாப்வே உள்ளிட்ட 81 நாடுகள் இந்த ஆண்டுக்கான நிதியை செலுத்தவில்லை எனவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, நிதி வழங்காத நாடுகள் உரிய நேரத்தில் நிதி வழங்கி, தனது பணியை ஐ.நா தொடர வழிவகை செய்யுமாறு முறையிட்டுள்ளதாகவும், ஐ.நா தலைவர் அண்டோனியோ குட்ரஸ் தெரிவித்துள்ளார்.

ஐ.நா சபை இயங்குவதற்கு தேவையான வருடாந்திர வரவு செலவு தொகையான சுமார் 5.4 பில்லியன் கோடி டாலர்களில் 22 சதவிகிதத்தை அமெரிக்கா ஏற்றுள்ளது. மேலும், 7.9 பில்லியன் டாலர்களில் 28.5 சதவிகிதம் தொகையை அமெரிக்கா தனது பங்களிப்பாக ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

-athirvu.in