பாகிஸ்தானின் பிரதமராகும் இம்ரான் கான் பற்றிய ஒரு பார்வை

பாகிஸ்தானில் புதன்கிழமை நடந்த தேசிய மற்றும் மாகாண தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகிய நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

பாகிஸ்தானில் அதிகாரம் மிக்கதாக இருக்கும் ராணுவத்துக்கு விருப்பமான வேட்பாளரான இம்ரான்கான் பிரதமராகும் வாய்ப்பு அதிகம் என்று தேர்தலுக்கு முன்பிருந்தே அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று தந்தவரான இம்ரான்கான், தற்போது நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார்.

நீதித்துறையும், நாட்டின் சக்திவாய்ந்த பாதுகாப்பு அமைப்பான ராணுவமும் தேர்தலில் மோசடி செய்வதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன; ஆனால் குற்றச்சாட்டுகளை நீதித்துறையும், ராணுவமும் மறுத்துள்ளன.

இந்நிலையில், காஷ்மீர் பிரச்சினை, இந்தியா-சீனாவுடன் உறவு, ராணுவ அதிகாரம் ஆகியவை பற்றியும், இந்தியப் பிரதமர் மோதி பற்றியும் இம்ரான்கானின் கொள்கைகள் என்ன, அவரது ஆளுமை வளர்ந்தது எப்படி என்று பார்ப்பது சுவாரசியமானது.

பாகிஸ்தான் நாடாளுமன்ற மற்றும் மாகாணத் தேர்தல்களில் போட்டியிட்ட மூன்று முக்கிய கட்சிகளுள் ஒன்று இம்ரானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சி (பி.டி.ஐ).

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான்கான், நாட்டில் மிகவும் பிரபலமானவர், வலுவான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.

1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு வெற்றி பெற்றுக் கொடுத்ததற்காக அனைவராலும் பரவலாக நினைவுகூரப்படுபவர் இம்ரான்கான். அதுமட்டுமல்ல, நாட்டின் மிகவும் வெற்றிகரமான கிரிக்கெட் கேப்டனாக இவர் கருதப்படுகிறார்.

1996ஆம் ஆண்டு அரசியலில் கால் பதித்த இம்ரான்கான் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.

ஆனால் 2013 தேர்தலில் தான், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சி மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய அரசியல் சக்தியாக உருவானது பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சி.

ராணுவத்தின் மறைமுகமான ஆதரவு எப்போதுமே இம்ரான்கானுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. அவர் ராணுவத்தின் செல்லப்பிள்ளை என்றும், பிடித்தமானவர் என்றும் அவரது அரசியல் போட்டியாளர்கள் குறிப்பிடுவது வழக்கம் என்றாலும், தனது கட்சியின் பிரபலத்திற்கு ராணுவத்தின் ஆதரவு இல்லை என இம்ரான்கான் கூறுகிறார்.

2018 தேர்தல்களில் ராணுவம் தனது கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டது என்ற குற்றச்சாட்டுகளை இம்ரான் மறுக்கிறார். முழுநேர அரசியலுக்குள் நுழைவதற்கு முன்பு, பிரிட்டனில் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்ததற்காக அனைவராலும் அறியப்பட்டார் இந்த பிரபல தலைவர்.

மூன்று முறை திருமணம் செய்து கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரரின் தனிப்பட்ட வாழ்க்கையில், உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்கள் அதிக அக்கறை காட்டுகின்றன.

தற்போது, மதப்பற்று கொண்ட, பிரபல தலைவராக திகழ்கிறார் இம்ரான்கான்.

65 வயது இம்ரான்கான் தனது நலப்பணிகளுக்காகவும் அறியப்படுகிறார். புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தனது தாயின் பெயரில் இலவச புற்றுநோய் மருத்துவமனை ஒன்றை அவர் கட்டினார்.

இம்ரான்கானின் தேர்தல் பிரச்சாரத்தில் ஊழலுக்கு எதிரான முழக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது குடும்பத்தினர் ஊழல் செய்ததாக பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தவர்களில் இம்ரான்கானும் ஒருவர்.

நவாஸ் ஷெரிஃபுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்ததிலும், பொதுத் தேர்தலுக்கு சில நாட்கள் முன்னதாக அவர் சிறைக்கு சென்றதிலும் இம்ரான்கானின் கட்சிக்கு முக்கிய பங்கு உள்ளது.

வாரிசு அரசியலை தொடர்ந்து விமர்சித்துவரும் இம்ரான்கான், அதுவே பாகிஸ்தானின் நிர்வாகம் ஒழுங்கற்று இருப்பதற்கும், பலவீனமான நிர்வாக அமைப்பிற்கும் அடிப்படைக் காரணம் என்று கூறுகிறார்.

நாட்டின் அரசியலில் ராணுவத்தின் பங்கை பி.டி.ஐ தலைவர் ஒருபோதும் எதிர்த்ததில்லை. அரசியல் தலைவர்களுக்கும், ராணுவத் தலைவர்களுக்கும் இடையிலான முக்கியமான உறவுகளை முறையாக நிர்வகிப்பதுதான் சரியான நிர்வாகம் என்று இம்ரான்கான் கூறுகிறார்.

“செயல்படும், நன்மைகளை செய்யும் ஜனநாயக அரசுகளை கொண்டிருப்பது பலம். பாகிஸ்தான் அரசியலில் ராணுவத்தின் செல்வாக்கு இருக்கிறது. ஏனெனில் நாங்கள் மோசமான அரசாங்கங்களை பார்த்திருக்கிறோம்.

நான் அதை நியாயப்படுத்தவில்லை, ஆனால் வெற்றிடம் ஒன்று இருந்தால் அதை எதாவது நிரப்பித்தானே ஆகவேண்டும்” என்று இம்ரான்கான் அண்மையில் அளித்த பேட்டியில் கூறியதாக டான் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்தியாவுடனான உறவுகள் உள்ளிட்ட பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கைகள் பற்றிய இம்ரானின் கருத்துகள் பிரபலமானவை. இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றங்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் கொள்கைகளே காரணம் என்று இம்ரான்கான் குற்றம் சாட்டுகிறார்.

“பாகிஸ்தானை தனிமைப்படுத்த முயற்சிப்பதுதான் நரேந்திர மோதி அரசின் கொள்கை என்று நான் நினைக்கிறேன். பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை அவர்கள் கொண்டிருக்கின்றனர்.

ஏனெனில் அவர்கள் காஷ்மீரில் செய்துவரும் அனைத்து காட்டுமிராண்டித்தனத்திற்கும் பாகிஸ்தானையே குற்றம் சாட்ட விரும்புகிறார்கள்” என டான் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இம்ரான்கான் கூறியிருக்கிறார்.

-tamilcnn.lk