சவப்பெட்டிக்குள் இருக்கும் நீரைக் குடிக்க முண்டியடிக்கும் மக்கள்!

எகிப்தில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்லாலான அலங்கார சவப்பெட்டியிலுள்ள நீரை அருந்த மக்கள் அனுமதி கோரி கையெழுத்திட்டுள்ளனர்.

குறித்த சவப்பெட்டியிலுள்ள சிவப்பு நிறத் திரவத்தை அருந்துவதற்கு அனுமதி கோரியே மக்கள் மனு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர்.

அந்த திரவம் மரணத்தை தம்முடன் அண்டவிடாது உயிரை சஞ்சீவியாக பேணும் அற்புதம் மிக்கது என அந்த மக்கள் நம்புகிறார்கள்.

ஆனால் அதுகுறித்து ஆய்வு செய்த நிபுணர்கள் அது சாக்கடை நீர் என தெரிவித்துள்ளார்கள்.

கடற்கரை நகரான அலெக்ஸாந்திரியாவில் மேற்படி கல்லாலான சவப்பெட்டி இம்மாதம் ஆரம்பத்தில் திறந்துவைக்கப்பட்டது.

இதன்பின்னர் இதுகுறித்து பல ஊடகங்களும் பல்வேறு செய்திகளை வெளியிட்டன. குறிப்பாக அந்த சவப்பெட்டி எகிப்தின் பண்டைய ஆட்சியாளர்களுடையது அல்ல என ஆய்வாளர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

அந்த சவப்பெட்டியிலுள்ள மனித எச்சங்கள் தொடர்பில் மேலும் தகவல்களை அறிவதற்கான முயற்சிகள் தற்போது மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.

இந்த நிலையில் தான் அந்த சவப்பெட்டி நீரை அருந்த பதினோராயிரம் பேருக்கும் மேல் விண்ணப்பத்தில் கையொப்பமிட்டுள்ளார்கள்.

கிரேக்கத்தின் ஆட்சியாளனாரன மகா அலெக்ஸாண்டருக்கு அந்த சவப்பெட்டி சொந்தமானதென அவர்கள் நம்புகிறார்கள்.

இது இவ்வாறிருக்கையில் இந்தச் சவப்பெட்டியைத் திறந்து சாபத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள் என்று வேறுபல மக்கள் நம்புகிறார்கள்.

பத்தடி நீளமும் ஆறரையடி உயரமும்கொண்ட இந்த சவப்பெட்டி தரையிலிருந்து பதினாறடி ஆழத்தில் புதைக்கப்பட்டுள்ளது.

இதில் காணப்பட்ட மூன்று மனித எலும்பு எச்சங்களும் எடுக்கப்பட்டு அலெக்ஸாந்திரியா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

-athirvu.in