சிரியா: 30க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்திய ஐஎஸ் அமைப்பு

சிரியாவின் தென்மேற்கு பகுதியில் ஐஎஸ் அமைப்பினர் 30க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளை பணயக்கைதிகளாக வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரியாவின் ட்ரூஸ் என்னும் சிறுபான்மை இனத்தை சேர்ந்தோர் ஆதிக்கம் செலுத்தும் சுவெய்டா பிராந்தியத்தில் கடந்த வாரம் ஐஎஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலின்போது இவர்கள் கொண்டுசெல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சுவெய்டா பிராந்தியத்தின் பெரும்பான்மையான பகுதி சிரியா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள நிலையில், சிறியளவிலான பகுதி ஐஎஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

ரஷ்யா தலைமையிலான சிரியாவின் அரசாங்க படைகள் ஜிகாதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதிகளை கைப்பற்றும் முயற்சியை சமீபத்தில் தொடங்கியிருந்தது.

இந்த கடத்தல் சம்பவம் குறித்து எஸ்ஓஎச்ஆர் என்னும் பிரிட்டனை தலைமையிடமாக கொண்ட கண்காணிப்பு அமைப்பு, சுவேடா24 என்ற இணையதளத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் 36 பெண்கள் மற்றும் குழந்தைகள் ஐஎஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டிருப்பதாக எஸ்ஓஎச்ஆர் தெரிவித்துள்ளது.

அப்போது சில பெண்கள் தப்பிப்பதற்கு முயற்சித்ததாகவும், அப்போது இரண்டு பேர் உயிரிழந்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரியா: 30க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்திய ஐஎஸ் அமைப்பு

ஆனால், இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக ஐஎஸ் அமைப்பு இதுவரை எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

மேலும், பணயக்கைதிகளை மீட்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துவருகிறதா என்பது குறித்த தெளிவான தகவல் இல்லை.

சிரியாவில் மூன்றாவது மிகப்பெரிய மத சிறுபான்மையினராக இருக்கும் ட்ரூஸ் சமூகத்தினர் ஐஎஸ் அமைப்பினரால் மதத்துக்கு விரோதமானவர்களாக கருதப்படுகின்றனர்.

சிரியா மற்றும் அதற்கு அருகிலுள்ள இராக்கில் ஐஎஸ் அமைப்பு தான் கொண்டிருந்த பெரும்பான்மையான பகுதிகளை கடந்த ஓராண்டில் இழந்துவிட்டது.

ஐஎஸ் அமைப்பினருடைய ஆதிக்கத்தின் உச்சியில் சிரியா இருந்தபோது சுமார் 10 மில்லியன் மக்கள் அவர்களின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் வசித்து வந்ததனர். ஆனால், இந்த வருடத்தின் தொடக்கத்தில் வெளிவந்த அமெரிக்க ராணுவத்தின் அறிக்கையில், ஐஎஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டிலிருந்த 98 சதவீத பகுதிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், சிரியாவின் சுவெய்டா, டேரா போன்ற பிராந்தியங்களிலும், அந்நாட்டின் கிழக்கு பகுதிலுள்ள பிராந்தியங்களில் ஐஎஸ் அமைப்பினரின் ஆதிக்கம் இன்னும்கூட உள்ளது. -BBC_Tamil