ஆப்கான் ஜலாலாபாத் அரச கட்டட பிணைக் கைதிகள் 15 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை

செவ்வாய்க்கிழமை கிழக்கு ஆப்கான் நகரமான ஜலாலாபாத்தில் அரச கட்டடம் ஒன்றுக்குள் புகுந்த மர்ம நபர்கள் மூவரில் ஒருவர் தற்கொலைக் குண்டை நுழை வாசலில் வெடிக்கச் செய்த பின் எஞ்சிய துப்பாக்கிதாரிகளால் பல பொது மக்கள் பிணைக் கைதிகளாக்கப் பட்டனர்.

பின்னர் பல மணிநேரமாக போலிசார், பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே மூண்ட துப்பாக்கிச் சமரில் இரு துப்பாக்கிதாரிகளும் கொல்லப் பட்டனர்.

ஆயினும் இச்சம்பவத்தின் போது குறித்த கட்டடம் முற்றாக சேதமாக்கப் பட்டதுடன் குறைந்தது 15 பொது மக்கள் தீவிரவாதிகளால் கொல்லப் பட்டும் மேலும் 15 பேர் காயமடைந்தும் உள்ளனர். இந்தத் தீவிரவாதத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. முன்னதாக திங்கள் அதிகாலை ஹீரட் மாகாணத்தில் இருந்து காபூலுக்குச் சென்ற 50 பயணிகள் அடங்கிய பேருந்துக்கு தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி 26 பேர் பலியாகியும் பலர் படுகாயம் அடைந்தும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் சிரியாவின் தெற்கே உள்ள ஸ்வெய்தா மாகாணத்தின் கிராமங்களில் இருந்து ISIS தீவிரவாதிகள் 36 பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கடத்தி பிணைக் கைதியாக வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இப்பகுதிகளில் அரச படையினரின் தாக்குதல் நகர்வைத் தடுத்து நிறுத்த இவ்வாறு பொது மக்களைத் தீவிரவாதிகள் கடத்தியிருப்பதாகத் தெரிய வருகின்றது.

-4tamilmedia.com