கருப்பின மக்களுக்கு நில விநியோகம்: அரசமைப்பு சட்டத்தை திருத்துகிறது தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவில் நிலவுடமையாளர்களிடம் இருந்து இழப்பீடு ஏதும் தராமல் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு அரசமைப்புச் சட்டம் திருத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார் அந்நாட்டு அதிபர் சிரில் ராமஃபோசா.

இது தொடர்பாக அவர் பேசிப் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்று வெளியானது.

நிலச்சீர்திருத்தம் (பெரும் நிலவுடமையாளர்களிடம் இருந்து நிலத்தை கையகப்படுத்தி நிலமற்றவர்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கை) செய்வதற்கு ஏதுவாக அரசமைப்புச் சட்டத் திருத்த முன்மொழிவை ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் முடிவு செய்யும் என்று அதில் தெரிவித்துள்ளார் ராமஃபோசா.

இந்தச் சீர்திருத்தம் பொருளாதாரத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறியுள்ளார் அவர்.

நிலச்சீர்திருத்த நடவடிக்கை மந்தமாக இருப்பதாகக் கூறி கடந்த சில மாதங்களாக மக்களிடையே கோபம் அதிகரித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சிறுபான்மை வெள்ளையின மக்களிடம் ஏராளமான நிலம் குவிந்துள்ளதாகவும், சில ஆயிரம் வெள்ளையின வணிகரீதியான விவசாயிகளிடம் வளமான நிலங்களின் பெரும்பகுதி இருப்பதாகவும் நம்பப்படுகிறது.

ஆனால், அண்டை நாடான ஜிம்பாப்வேயில் நடந்த மாதிரி, நில எடுப்பு நடவடிக்கைகள், நிலம் பிடுங்கும் நடவடிக்கையாக மாறவும் வாய்ப்பிருப்பதாக விமர்சகர்கள் அஞ்சுகின்றனர்.

நாடாளுமன்ற நடைமுறைகள் மூலமாகவே இந்த அரசமைப்புச் சட்டத்திருத்த நடவடிக்கையை ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மேற்கொள்ளும்.

நிலச்சீர்திருத்த நடவடிக்கையை அரசமைப்புச் சட்டம் வெளிப்படையாகப் பேசவேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பது தெளிவாகியுள்ளதாக ராமஃபோசா கூறியுள்ளார். அரசமைப்புச் சட்ட ஜனநாயகத்துக்காகவே தாங்கள் முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பல லட்சம் தென்னாப்பிரிக்கர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்கு விவசாயத்தை நம்பியுள்ளனர்.
பல லட்சம் தென்னாப்பிரிக்கர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்கு விவசாயத்தை நம்பியுள்ளனர்.

“அனைவருக்குமான பொருளாதாரம், அனைவருக்குமான வளர்ச்சி மற்றும் வேலை என்பதற்கான சமூகத் திட்டத்தை வகுப்பதில் எல்லா தென்னாப்பிரிக்கர்களும் எங்களோடு உழைக்கவேண்டும்” என்று அதிபர் கோரியுள்ளார்.

30 சதவீத நிலங்கள் கருப்பின மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இலக்கு நிர்ணயித்திருந்தாலும், இனப் பாகுபாடு ஒழிக்கப்பட்ட காலத்தில் இருந்து 10 சதவீத நிலங்களே வெள்ளையின உரிமையாளர்களிடம் இருந்து கருப்பின மக்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. -BBC_Tamil