ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கடத்தப்பட்ட மூன்று வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இறந்த மூன்று பேரும் இந்தியா, மலேசியா மற்றும் மாசிடோனியாவை சேர்ந்தவர்கள் என்றும் இதனை தீவிரவாதிகள் செய்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த மூன்று பேரும் காபூல் விமான நிலையத்தை நோக்கி தங்களது காரில் சென்றுகொண்டிருக்கும்போது கடத்தப்பட்டதாக பிபிசியிடம் பேசிய போலீசார் தெரிவித்துள்ளனர்.
மூன்று பேரின் உடல்களும் காபூல் பிராந்தியத்தின் முஸ்ஸாஹி மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்வத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.
- படை பலத்தில் சரிவா? என்ன சொல்கிறது ஆப்கானிஸ்தான்?
- அகதி முகாம் முதல் உலகின் ‘நம்பர் ஒன்’ பௌலர் ஆனது வரை – ரஷீத் கான்
இந்த மூன்று பேரும் பிரெஞ்சு உணவு நிறுவனமான சோடெக்சோ நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் என்று நம்பப்படுகிறது.
கண்டெடுக்கப்பட்ட இவர்களது அடையாள அட்டைகளை கொண்டு சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர்களில் இந்தியாவை சேர்ந்தவருக்கு 39, மலேசியாவை சேர்ந்தவருக்கு 64 மற்றும் மாசிடோனியாவை சேர்ந்தவருக்கு 37 வயதாவதாக தெரியவந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் பொது மக்களை போராளிகளும், தீவிரவாதிகளும் கடத்துவதும், அதற்கு பிணையாக பெருந்தொகையை கேட்பதும் வாடிக்கையாகி வருகிறது.
காபூலிலுள்ள ஆப்கானிஸ்தான் அமெரிக்கன் யூனிவர்சிட்டியில் பணிபுரிந்து வந்த ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த இரண்டு பேராசிரியர்கள் கடந்த 2016ஆம் ஆண்டு கடத்தப்பட்டனர்.
கடந்தாண்டு ஜனவரி மாதம் தலிபான்கள் வெளியிட்ட காணொளியில், இவர்களிருவரையும் விடுவிக்க வேண்டுமென்றால் சிறையிலடைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், விடுக்க வேண்டுமென்று அவர்கள் நிபந்தனை விடுத்திருந்தனர். -BBC_Tamil