பெண் துறவிகளின் மனங்களை மயக்கி, தொந்தரவு கொடுத்து அவர்களை உடலுறவு கொள்ள செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை அதிகாரம் மிக்க சீனத் துறவி ஒருவர் மறுத்துள்ளார்.
இந்த துறவி தங்கியிருக்கும் லொங்சுவான் கோயிலில் இருந்து 2 துறவிகள் அரசு அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் மடாதிபதி சுயேசொங்கின் சர்ச்சைக்குரிய செயல்பாடுகள் விவரிக்கப்பட்டுள்ளன.
உண்மைகளை திரித்து கூறுவதாக தலைநகர் பெய்ஜிங்கிலுள்ள கோயில் இந்த 2 துறவிகளையும் குற்றஞ்சாட்டியுள்ளது.
சீனாவில் அதிகரித்து வரும் “#MeToo” இயக்கத்தின் ஒரு பகுதியாக பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் சமீபத்திய பிரபலமான நபர் மடாதிபதி சுயேசொங் ஆவார்.
சீனாவின் பௌத்த மதக் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பிலுள்ள இவர், இந்தப் பொறுப்பை வகிக்கும் இளைய துறவியாவார். அரசுக்கு அரசியல் ஆலோசகராகவும் இவர் இருந்து வருகிறார்.
சீன சமூக வலைதளமான “வெய்போ”-வில் பல லட்சக்கணக்கானோர் இவரை பின்தொடருகின்றனர்.
இது தொடர்பாக புலனாய்வு குழு ஒன்றை அமைக்கப்போவதாக “வெய்போ” சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோயில் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது, ஆனால், சுயேசொங் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளதை குறிப்பிட்டு காட்டியுள்ளது.
புனையப்பட்ட சான்றால், மடாதிபதி சுயேசொங்கை மோசமாக சித்தரிக்கும் நோக்கம் இதில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது. -BBC_Tamil