ஐரோப்பிய வெப்பம் 50 பாகையை தாண்டும்!

ஸ்பெயின்-போர்த்துக்கலில் 47 பாகை – உயிர்ப்பலிகள்! பரிஸில் வீதிதடாகங்களில் குளிக்க அனுமதி! சுவிடனின் பனிமலைஉச்சி உருகியது! சுவிசில் நாய்களுக்கு காலணிகள்!

ஐரோப்பாவில் பரவிவரும் புதியவெப்ப அலையால் ஐபீரிய பிராந்தியத்தின் சில இடங்களில் வெப்பநிலை 50 பாகையை தாண்டும் என காலநிலை அவதானநிபுணகள் எச்சரித்துள்ளார்.

தற்போது நிலவும் வெப்பஅலை நிச்சயமாக 1977 யூலையில் ஏதென்சில் பதிவாகிய 48 பாகை அளவை எதிர்வரும் நாட்களில் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில்தான் 50 பாகை குறித்த இந்த எச்சரிக்கை வந்துள்ளது.

இன்று ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் ஆகிய நாடுகளில் ஏற்கனவே வெப்பம் 47 பாகையை தாண்டியுள்ளது. கடும்வெப்பம் காரணமாக ஸபெயினில் இருவர் பலியாகியுள்ளனர். இதனால் அங்குள்ள அதிக பிராந்தியங்களில் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

குளிர்பிராந்தியமாக கருதப்படும் ஸ்கன்டினேவியாவையும் கடும் வெம்மை விட்டுவைக்கவில்லை. சுவிடனின் உயர்ந்த பனிமலை உச்சிப்பகுதி 13 அடி அளவுக்கு உருகியுள்ளது.

வெப்பஅலை காரணமாக ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்தும்அவசர நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. உடல்வெம்மையை தணித்து குளிர்மைப்படுத்தும் சிறப்பு நீர்விசிறிகள் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

பரிஸில் பொது இடங்களில் உள்ள சில செயற்கை நீருற்று தடாகங்களில் பொதுமக்கள் உடல்களை நனைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஈபில் கோபுர முன்றலில் உள்ள தடாகத்துக்கும் இந்தஅனுமதி கிட்டியது.

லண்டன் வெப்பநிலை இன்று 30 பாகையை தாண்டியது. இத்தாலியின் ரோம் மற்றும் போலந்து தலைநகர் வார்சோவில் பொது இடங்களில் இலவச குடிநீர் போத்தல்கள் வழங்கப்பட்டுவருகின்றன.

கடும்வெப்பத்தால் சில கடற்கரைகளில் திடீர் பாசிவளர்ச்சி இடம்பெறுவதால் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சுவிற்சலாந்தில் வெப்பத்தாக்கம் காரணமாக நாய்களை வளர்ப்போர் அதன் கால்களுக்கு காலணிகளை(சப்பாத்துக்களை) அணிவிக்கவேண்டுமென காவற்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது

வெளியே நிலவும் வெப்பத்தை விட நிலங்களின் வெப்பநிலை இருபது இருபத்தைந்து பாகைகள் அதிகம் என்பதால் நாய்களின் கால்கள் பாதிக்கப்படாமல் இருக்க இந்த நகர்வு என அறிவிக்கபபட்டுள்ளது.

இந்தசெய்தியை நோக்கும் போது அது வேடிக்கையாக இருந்தாலும் வெப்பநிலத்தில் கால்களை வைக்கும் நாய்களின் வேதனை மிகமிக அதிகம் என சுவிஸ்காவற்துறை விளக்கம் அளித்துள்ளது.

-athirvu.in