வெனிசுவேலா நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ கரகஸில் நேரலை தொலைக்காட்சி உரையாடலின்போது ஆளில்லா விமான வெடிகுண்டு வெடித்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில் அதிபருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் மதுரோவின் உயிரை குறிவைத்து இந்த சம்பவம் நிகழ்த்தப்பட்டதாக குறிப்பிட்ட தகவல் தொடர்பு அமைச்சர் ஹோர்கே ரோட்ரிகஸ், இதில் ஏழு வீரர்கள் காயமடைந்ததாக தெரிவித்தார்.
திறந்த வெளியில் நடைபெற்ற ராணுவ நிகழ்ச்சியில் அதிபர் நிக்கோலஸ் பேசிக் கொண்டிருந்தார். திடீரென மேலே பார்த்து அவரும், அங்கிருந்த மற்ற அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
நேரலை தடை செய்யப்படுவதற்கு முன், அங்கிருந்த ராணுவ வீரர்கள் ஓடத் தொடங்கினர்.
- ஊட்டச்சத்துக்கு குறைபாட்டை போக்க வெனிசுவேலா அதிபரின் நூதன “முயல் திட்டம்”
- வெனிசுவேலா: அரசுக்கு எதிராக வயலின் இசைத்தவர் காயம்
அப்போது எடுக்கப்பட்ட காணொளியில் வெடிகுண்டு சத்தங்கள் கேட்டன.
வெனிசுவேலா அதிகாரிகள் கூறுவது என்ன?
வெனிசுவேலா ராணுவத்தின் 81வது ஆண்டினை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் அதிபர் மதுரோ உரையாற்றிக் கொண்டிருந்தபோது, இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக அமைச்சர் ரோட்ரிகஸ் தெரிவித்தார்.
அதிபர் நின்று கொண்டிருந்த இடத்திற்கு அருகில் வெடிகுண்டுகளை தாங்கிய இரண்டு ட்ரோன்கள் சென்றதாகவும் அவர் குறிப்பிடுகிறார். தாக்குதலை நடத்தியது வலதுசாரி எதிர்கட்சி என்றும் அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
“வாக்குகள் இழந்த பிறகு, தற்போதும் அவர்கள் தோற்றுவிட்டனர்” என்று ரோட்ரிகஸ் தெரிவித்தார்.
கடந்த மே மாதம் நடந்த அதிபர் தேர்தலில், மீண்டும் மதுரோ தேர்வு செய்யப்பட்டதையே அவர் குறிப்பிடுகிறார்.
காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிபர் நிக்கோலஸ், அவரது அமைச்சர்கள் மற்றும் ராணுவ கமாண்டர்களை சந்தித்தார்.
இத்தாக்குதல் முயற்சிக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை. -BBC_Tamil