இரண்டாம் உலகபோரில் பயன்படுத்தப்பட்ட விமானம் ஒன்று கிழக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள மலைப்பகுதியில் மோதியதில் அதில் பயணித்த 20 பேரும் கொல்லப்பட்டனர் என காவல் துறை தெரிவித்துள்ளது.
ஜன்கர்ஸ் நிறுவனம் தயாரித்த விமானமான ஜெ.யு -52 ஹெச்.பி – ஹாட், 17 பயணிகள் மற்றும் மூன்று பேர் அடங்கிய ஊழியர் குழுவினருடன் சனிக்கிழமை மாலையில் பயணத்தை துவங்கியது.
இந்த விமானத்தை இயக்கிய ஜெ.யு – ஏர் இச்செய்தியால் மிகவும் வருத்தமடைந்துள்ளதாகவும் விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்களை தொடர்புகொள்ள தொலைபேசி சேவையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
- 103 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட தொலைந்த நீர்மூழ்கிக் கப்பல்
- இந்தியாவில் ராணுவ புரட்சி ஏற்படும் வாய்ப்பு உண்டா?
ஜெ.யு ஏரின் விமான சேவைகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான விபத்து எதனால் ஏற்பட்டது என்பது இதுவரை தெளிவாக அறியப்படவில்லை.
”விபத்து நடந்த இடத்தில் இருக்கும் நிலைமையை பார்க்கும்போது, விமானம் தரையில் மிக அதிக வேகத்தில் செங்குத்தாக மோதியது என்பதை சொல்லமுடியும். மற்றொரு விமானம் அல்லது கேபிள் போன்ற எதாவது தடை ஏற்படுத்தும் பொருட்களுடன் இவ்விமானம் மோதியிருக்கலாம்” என சுவிட்சர்லாந்து போக்குவரத்து பாதுகாப்பு விசாரணை வாரியத்தை சேர்ந்த டேனியல் நெச்ட் தெரிவித்துள்ளார்.
இவ்விமானத்தில் பயணம் மேற்கொண்ட பயணிகள் 42 – 84 வயதுக்குட்பட்டவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளனர்.
நாட்டின் தென் பகுதியான டிசினோவுக்கும் ஜூரிக் அருகேயுள்ள டுபென்டரோஃப் ராணுவ விமான தளத்துக்கும் இடையே இந்த விமானம் பயணித்தது. கடல்மட்டத்தில் இருந்து 8,333 அடி உயரத்தில் இவ்விமான விபத்து நிகழ்ந்துள்ளது.
ஜெர்மனில் தயாரிக்கப்பட்ட இப்பழைய ராணுவ விமானத்தை சுற்றுலாவுக்காக இயக்கி வந்தது ஜெயு – ஏர்.
மத்திய சுவிட்சர்லாந்தில் சனிக்கிழமை நடந்த மற்றொரு விமான விபத்தில் இரண்டு இளம் குழந்தைகள் உள்பட நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் கொல்லப்பட்டது. -BBC_Tamil