மாணவர்களால் பங்களாதேஷில் பெருமளவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள், வன்முறையாக மாறியுள்ள நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக, நாட்டின் அநேகமான இடங்களில், அலைபேசிகளுக்கான இணையச் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.
வேகமாகப் பயணித்த பஸ்ஸொன்று மோதியதன் காரணமாக, இரண்டு மாணவர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, தலைநகர் டாக்காவில் கடந்த வாரம் ஒன்றுகூடிய மாணவர்கள், கடந்த வாரம் முழுவதும், டாக்காவின் சில பகுதிகளை முடக்கியிருந்தனர்.
எனினும், நேற்று முன்தினம் (04) இப்போராட்டங்கள் வன்முறையாக மாறின. டாக்காவின் ஜிகட்டாலா பகுதியில் ஏற்பட்ட இவ்வன்முறையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இப்போராட்டம் வன்முறையாக மாறுவதற்கு என்ன காரணமென்பது தெளிவில்லாமல் உள்ள போதிலும், போராட்டக்காரர்கள் மீது, பொலிஸாரால் இறப்பர் குண்டுகளும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளும் வீசப்பட்டன எனவும், அரசாங்கத்துக்கு ஆதரவான போராட்டக்காரர்கள் என்று கருதப்படுவோரால், மாணவர்கள் தாக்கப்பட்டனர் எனவும், டாக்காவிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இவ்வன்முறைகளின் பின்னணியிலேயே, அலைபேசி இணையச் சேவைகளை முடக்கும் முடிவை, அரசாங்கம் எடுத்துள்ளது. நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்தவர்கள், அலைபேசி மூலமாக, இணையச் சேவைகளை அணுக முடியாதுள்ளதென, நேற்றுத் தெரிவித்தனர். இவ்வாறான நிலைமை, அந்நாட்டு அதிகாரிகளும் உள்ளூர் ஊடகங்களும் உறுதிப்படுத்தினர்.
-tamilmirror.lk