தனது நாட்டின் உள்விவகாரத்தில் ‘தலையிட்ட’ கனடாவுடனான அனைத்து புதிய வர்த்தகம் மற்றும் முதலீடுகளை நிறுத்திவைப்பதாக சௌதி அரேபியா தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சௌதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட தொடர் ட்விட்டுகளில், கனடாவுக்கான தனது தூதரை திரும்ப அழைத்தது குறித்தும், சௌதி அரேபியாவுக்கான கனடாவின் தூதரை நாடு திரும்ப உத்தரவிட்டது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சௌதி அரேபியாவில் பெண் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது குறித்து ‘மிகுந்த கவலை’ அடைந்துள்ளதாக கனடா கூறியதையடுத்து மேற்கண்ட நடவடிக்கைகளை சௌதி அரேபியா மேற்கொண்டுள்ளது.
- சௌதி அரேபியா: ஆண் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது
- சௌதி அரேபியா: முடிவுக்கு வந்தது பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான தடை
கைது செய்யப்பட்ட பெண் செயற்பாட்டாளர்களில், சௌதி-அமெரிக்க பெண்ணுரிமை செயற்பாட்டாளர் சமர் பாடாவியும் ஒருவர். அவர் சௌதி அரேபியாவின் சமூக கட்டமைப்பில் ஆண்களின் ஆதிக்கத்தை முடிவுக்குகொண்டுவர வேண்டுமென்று வலியுறுத்தியிருந்தார்.
என்ன சொல்கிறது சௌதி அரேபியா?
தனது நாட்டின் உள்விவகாரத்தில் எவ்விதமான தலையீடலையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சௌதி அரேபியாவின் வெளியுறத்துறை அமைச்சகம் கூறுகிறது.
சமூகம் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக போராடியதால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செயற்பாட்டாளர்களை சௌதி அரேபியா விடுவிக்க வேண்டுமென்று சென்ற வாரம் வலியுறுத்தியிருந்த கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கனடாவின் இந்த செயல் தனது நாட்டின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்று விமர்சித்துள்ள சௌதி அரேபியா, கீழ்க்கண்ட நடவடிக்கைகளை அந்நாட்டின் மீது எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
1. இருநாடுகளுக்கிடையேயான புதிய வர்த்தகம் மற்றும் முதலீடுகளை நிறுத்தி வைப்பது,
- சௌதி அரேபியாவுக்கான கனடாவின் தூதரை 24 மணிநேரத்தில் கனடாவுக்கு திரும்ப அனுப்ப உத்தரவிடுவது,
கனடாவுக்கான தனது தூதரை திரும்ப அழைப்பது போன்ற அறிவிப்புகளை சௌதி அரேபியா வெளியிட்டுள்ளது.
சௌதி அரேபியாவின் இந்த நடவடிக்கைகள் குறித்து கனடா அரசாங்கம் பொதுவெளியில் இதுவரை எந்த கருத்தையும் தெரிவித்ததில்லை.
செளதியின் முடி இளவரசர் முகமது பின் சல்மான், நாட்டை நவீனமாக்க ஓராண்டாக பல முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், இந்த கைது நடவடிக்கைகள் முரண்பாடுகளாக பார்க்கப்படுகின்றன.
சௌதி அரேபியாவில் பெண்கள் வாகனம் இயக்குவதற்கு நீடித்து வந்த தடையை நீக்குவது குறித்து முடி இளவரசர் முகமது பின் சல்மான் கடந்தாண்டு வெளியிட்ட அறிவிப்பு அந்நாட்டில் மட்டுமல்லாது, உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றது.
செளதி அரேபியாவில் பெண்களுக்கு கடுமையான ஆடை கட்டுப்பாடுகள் உள்ளன. மேலும் பயணம் மேற்கொள்வதற்கோ, பணி செய்வதற்கோ அல்லது மருத்துவமனைகளுக்கு செல்லவோ, அவர்கள் தங்களது ஆண் பாதுகாவலர்களான
தந்தை, கணவர் அல்லது சகோரதரர்களிடமிருந்து எழுத்து மூலம் அனுமதி பெற வேண்டும். -BBC_Tamil