ஒப்பந்தப் பிரகாரம் அணுவாயுதத் தயாரிப்பை வடகொரியா கைவிடவில்லை! : ஐ.நா பாதுகாப்புச் சபை

அண்மையில் நியூயோர்க்கிலுள்ள ஐ.நா பாதுகாப்புச் சபையில் தாக்கல் செய்யப் பட்ட அறிக்கையில் ஜூன் 12 ஆம் திகதி சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் ஒப்புக் கொண்டதன் பிரகாரம் இன்னமும் அணுவாயுதத் தயாரிப்பை வடகொரியா கைவிடவில்லை எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து 2 மாதங்கள் கூட ஆகாத நிலையில் வடகொரியா மீண்டும் அணுவாயுதத் தயாரிப்பில் ஈடுபடத் தொடங்கியுள்ளது.

மேலும் ஐ.நா விதித்த பொருளாதாரத் தடையையும் அப்பட்டமாக மீறி வருகின்றது. அதாவது சட்ட விரோதமாக ஒரு கப்பலில் இருந்து இன்னொரு கப்பல் என பெட்ரோலியப் பொருட்களை மாற்றி மாற்றி இறக்குமதி செய்வதுடன் இதே முறையில் நிலக்கரியை ஏற்றுமதி செய்தும் வருகின்றது. இது தவிர யுத்தத்தால் பீடிக்கப் பட்டுள்ள சிரியாவுக்கு இராணுவ ஒத்துழைப்பையும் யேமெனில் ஹௌத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத விற்பனையையும் செய்வதற்கு வடகொரியா முயன்று வருகின்றது. கடந்த 3 ஆண்டுகளாக வடகொரிய இராணுவத் தலைவர்கள் சிரியாவுக்குச் சென்று பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளனர்.

பாதுகாப்புச் சபையில் தாக்கல் செய்யப் பட்டுள்ள இந்த அறிக்கையால் அமெரிக்கா விசனம் அடைந்துள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பெயோ இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில் இவ்வறிக்கை அதிர்ச்சி அளிப்பதாகவும் வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகளை உலக நாடுகள் முழுமையாக பின்பற்ற வேண்டும் எனவும் சிங்கப்பூர் பேச்சுவார்த்தை படி வடகொரியா தனது வாக்குறுதியை நிறைவேற்றும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

-4tamilmedia.com