’வெனிசுவேலா சட்டமன்ற உறுப்பினரும் மாணவத் தலைவரும் கைதாகினர்’

சட்டமன்ற உறுப்பினர் ஜுவான் றெசன்ஸும் அவரது சகோதரியும் மாணவத் தலைவரொருவருமான ரபேலா றெசன்ஸும் வெனிசுவேலாத் தலைநகர் கராகஸிலுள்ள அடுக்குமாடியொன்றில் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக வெனிசுவேலாவின் எதிரணி தெரிவித்துள்ளது. கடந்த வாரயிறுதியில் இடம்பெற்ற ட்ரோன் வெடிப்புகளைத் தொடர்ந்து வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ நடவடிக்கைக்கு உத்தரவிட்ட நிலையிலேயே குறித்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.

சட்டமன்ற உறுப்பினர் ஜுவான் றெசன்ஸையும் பல்கலைக்கழக நிலையங்களின் சம்மேளனத் தலைவர் ரபேலா றெசென்ஸையும் கட்டாயப்படுத்தி புலனாய்வு முகவரகத்தின் 14 நபர்கள் கடத்திச் சென்றதாக ஜுவான் றெசன்ஸின் நீதி முதல் கட்சி டுவீட் செய்துள்ளது.

இந்நிலையில், பின்னர் கராகஸ் சிறைச்சாலையொன்றுக்கு முன்னாலிருந்து சமூக வலைத்தளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட காணொளிக் காட்சியொன்றில் ரபேலா றெசன்ஸ் விடுவிக்கப்பட்டதாகவும் பாதுகாப்பான இடமொன்றில் இருப்பதாகவும் அவரது தந்தை தெரிவித்துள்ள்ளார்.

இதேவேளை, சமூக வலைத்தளத்தில் வலம்வரும் மற்றுமொரு காணொளியில், ஜுவான் றெசன்ஸின் சகோதரங்கள் மின் தூக்கியொன்றிலிருந்து வேகமாக வெளியேறுவதாகவும் பின்னர் அவர்கள் துரத்தில் செல்லப்பட்டு ஆயுதந்தரிக்கப்பட்ட பாதுகாப்பு முகவர்களால் கைதுசெய்யப்படுவதாகவும் காண்பிக்கப்படுகிறது.

இந்நிலையில், குறித்த சம்பவங்களுக்குப் பின்னர் தொலைக்காட்சி வழியாக உரையாற்றியிருந்த ஜனாதிபதி மதுரோ, தேசிய காவலர் அதிகாரி எனக் கூறப்படுமொருவர், ட்ரோன் தாக்குதலில் ஜுவான் றெசன்ஸ் பங்கெடுத்ததாகத் தெரிவிக்கும் காணொளியொன்றை காண்பித்திருந்தார். குறித்த அதிகாரியின் முகம் தெளிவற்றதாகக் காண்பிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, இராணுவப் பேரணியில் ஆயுதந்தரிக்கப்பட்ட ட்ரோன்களை ஏவுவதற்கான நடவடிக்கையை ஒழுங்கமைப்பதற்கு தான் உதவியாக வெனிசுவேலா மாநகர பொலிஸின் முன்னாள் தலைவரும் அரசாங்கத்துகெதிரான செயற்பாட்டாளருமாகிய சவ்வடோரே லுச்செஸ்ஸே தெரிவித்துள்ளார்.

-tamilmirror.lk