அமெரிக்க தடைகள் எதிரொலி: ரஷ்ய நாணய மதிப்பில் அதிக வீழ்ச்சி

ரஷ்யா மீது புதிய தடைகளை விதிக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்த சில மணிநேரங்களில் டாலருக்கு இணையான ரஷ்ய நாணய மதிப்பில், பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு ஏற்பட்ட பெரும் வீழ்ச்சி இதுதான்.

பிரிட்டனிலுள்ள முன்னாள் ரஷ்ய உளவாளி மீதும், அவரது மகள் மீதும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நச்சுப்பொருளால் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு இந்த புதிய தடைகளை விதிக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

மாஸ்கோ பங்குச்சந்தையில் ரஷ்ய நாணயமான ரூபிளின் மதிப்பு 66.7 டாலராக வீழ்ச்சி கண்டுள்ளது. செவ்வாய்கிழமை ரூபிளின் மதிப்பு 63.4 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வியாழக்கிழமையன்று, அரோஃபுளோட், ருசாய் மற்றும் சபர்பேங்க் உள்ளிட்ட ரஷ்யாவின் முக்கிய நிறுவனங்களின் பங்குச்சந்தை மதிப்பில் பல சதவீத புள்ளிகள் மாஸ்கோவில் சரிவு கண்டுள்ளன.

செர்கெய் ஸ்கிரிபாலும், அவரது மகள் யூலியாவும்

ரூபிளுக்கு இணையான யூரோ நாணயத்தின் மதிப்பும் உயர்ந்துள்ளது.

செர்கெய் ஸ்கிரிபாலும், அவரது மகள் யூலியாவும் கடந்த மார்ச் மாதத்தில் சாலிஸ்பர்ரி நகரில் நினைவிழந்த நிலையில் கண்டறியப்பட்டனர்.

நச்சுத்தாக்குதலால் தீவிர பாதிப்புக்குள்ளான இருவரும் மருத்துவமனையில் பல வாரங்கள் சிகிச்சை பெற்ற பின்னர், நலமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலில் ரஷ்யாவின் பங்கு இருப்பதாக கூறப்படுவதை, ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த நச்சுத்தாக்குதலுக்கு உள்ளான இருவரும் எங்குள்ளார்கள் என்பது ரகசியமாக உள்ளது. -BBC_Tamil