கனடா: துப்பாக்கிச்சூட்டில் நால்வர் மரணம்

கனடாவின் ஃப்ரெடெரிக்டன் (Fredericton) நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை அதிகாரிகள் இருவர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பிராந்திய தலைநகரான நியூ ப்ருன்ஸ்விக்கில் (New Brunswick) நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இறந்தவர்களின் பெயர் இன்னும் வெளியிடப்படவில்லை, மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணமும் தெளிவாக தெரியவில்லை.

இனி மக்களுக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்று போலீஸார் கூறுகிறார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

நிலைமையை உன்னிப்பாக கவனித்துவருவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கனடா

பணியில் இருக்கும்போது போலீஸ் அதிகாரிகள் மரணமடைவது கனடாவில் மிகவும் அரிது. 1961 முதல் 2009 வரை 133 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ள நிலையில் நியூ ப்ருன்ஸ்விக்கில் ஐந்து பேர் மட்டுமே இறந்துள்ளனர்

கனடா நேரப்படி காலை ஏழு மணிக்கு பிறகு நான்கு துப்பாக்கி குண்டுகள் சுடப்படும் ஓசை கேட்டதாக உள்ளூர் தொலைகாட்சி நிருபர் ஒருவர் தெரிவித்தார்.

சி.டி.வி அட்லாண்டிக் என்ற ஊடகத்தின் நிருபர் நிக் மூரே ட்விட்டரில் வெளியிட்டுள்ள காணொளிக் காட்சிப் பதிவில், அவசரகால வாகனங்கள் ஒரு வீட்டின் வெளியே நிற்பது காட்டப்பட்டுள்ளது.

துப்பாக்கி வைத்துக் கொள்வது தொடர்பான சட்டங்கள், அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது கனடாவில் கடுமையானதாக இருந்தபோதிலும், அண்மை ஆண்டுகளில் கனடாவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. -BBC_Tamil