அரசு சேவை அளவைக் குறைப்பதற்கு எதிரான நிலையை பிகேஆர் இளைஞர் தலைவர் சம்சுல் இஸ்காண்டார் முகமட் அகின் அறிவித்துள்ளார்.
அந்த விஷயம் மீது பக்காத்தான் ராக்யாட் தலைவர்கள் விடுத்துள்ள அறிக்கைகள் கட்டுக்கோப்பை மீறும் வகையில் அமைந்துள்ளதாக அவர் சொன்னார்.’
சம்சுல் இன்று ஜோகூரில் பிகேஆர் இளைஞர் பிரிவின் தேசியப் பேரவையில் கொள்கை உரையாற்றினார்.
“பக்காத்தான் ராக்யாட் மிகுந்த கட்டுக்கோப்புடன் இயங்க வேண்டும். யோசித்த பின்னரே எந்தக் கருத்தும் தெரிவிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அந்தக் கருத்துக்கள் பக்காத்தானுடைய மற்ற தரப்புக்கள் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய முடியும்.”
“பக்காத்தானுக்கு பாதிப்பைக் கொண்டு வந்துள்ள பிரச்னைகளில் அரசு சேவை அளவைக் குறைக்கும் யோசனையும் ஒன்றாகும். அது முற்றிலும் நடைமுறைக்கு ஏற்றதல்ல,” என்றார் சம்சுல்.
டிஏபி பிரச்சாரப் பிரிவுத் தலைவரும் பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி-யுமான டோனி புவா விடுத்த அறிக்கை பற்றி அவர் கருத்துரைத்தார்.
புவா அறிக்கைக்கு கடுமையாக குறிப்பாக மலாய் அமைப்புக்கள் எதிர்ப்புத் தெரிவித்தன.
அரசாங்கச் சேவையில் உள்ளவர்களில் பெரும்பகுதியினர் அந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள்.
அரசாங்கத்தின் அளவைக் குறைக்க வேண்டியதின் அவசியத்தை ஆதரிக்கும் அவர், அரசாங்கத்தில் செய்யப்படும் அரசியல் நியமனங்களைக் குறைப்பதே அதற்கான வழி என்றார்.
மக்கள் தொகை அளவுக்கு பொருத்தமாக இல்லாத அமைச்சுக்களின் எண்ணிக்கையை குறைப்பதும் அவற்றுள் அடங்கும்.
“நாம் உண்மையான பிரச்னைகள் மீது கவனம் செலுத்த வேண்டும். பிஎன் ஊடகங்கள் தில்லுமுல்லு செய்வதற்கு இடமளிக்கும் யோசனைகளை நாம் முன் வைக்கக் கூடாது,” என 500 பேராளர்களும் பார்வையாளர்களும் கலந்து கொண்ட பேரவையில் கூறினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய சம்சுல், புவா அறிக்கை ‘நிம்மதி இல்லாத உணர்வை’ (membuat rasa tak senang) ஏற்படுத்தியதாகச் சொன்னார். ஏனெனில் அந்த விஷயம் பக்காத்தான் கூட்டங்களில் விவாதிக்கப்படவே இல்லை என்றார் அவர்.